அன்றாடம் பயன்படுத்தும் மசாலா பொருட்கள் கொண்டு உடல் எடையை குறைக்கலாமா? எப்படி?
என்னதான் வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையின் காரணமாக நாம், பழையவற்றையும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான ஆகாரங்களையும் எடுத்துக் கொள்வதில் தவறு செய்து விடுகிறோம். கண்ட இடங்களில் சாப்பிடுவது, உடலுக்கு தீங்கு விளைவிப்பதை எடுத்துக் கொள்வது, நேரம் தவறி சாப்பிடுவது, எளிதில் ஜீரணமாகாத உணவுகளை எடுத்துக் கொள்வது என்று எப்போதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறோம். இதன் காரணமாக ஒரு சிலருக்கு வியாதிகள் ஏற்படுகிறது. சிலருக்கு உடல் பருமன் அதிகரித்துவிடுகிறது.
இதற்காக உடற் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஆம், உடல் எடை குறைப்பில் உணவே முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் எடை குறைப்புக்கு முக்கியமாக பயன்படுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.
லவங்கப்பட்டை:
அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை நாம் சாப்பிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை லவங்கப்பட்ட குறைப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பைக் குறைத்து உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது.
சோம்பு:
சோம்பில் அதிகளவு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது விட்டமின்களையும், தாது உப்புக்களையும் உடல் உறிஞ்சுக் கொள்வதற்கு உதவுகிறது. உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து அதனை குடித்து வந்தால் உடலிலுள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறி உடல் எடை குறையும்.
ஏலக்காய்:
நறுமணத்தை தரும் ஏலக்காய் உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பு கரையச் செய்கிறது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. இதிலுள்ள மூலக்கூறுகள் குடலில் உள்ள தீமை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. செரிமானத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மிளகு:
மிளகில் வைட்டமின்கள் சி, ஏ, கே, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இயற்கையான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஊக்கியமாக செயல்படுகிறது. இதிலுள்ள தெர்மோஜெனிக் தன்மை தேவையற்ற கலோரிகளையும், கொழுப்பையும் எரிக்கிறது.
மஞ்சள்:
மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதோடு உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள குர்குமின் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கிறது.
வெந்தயம்:
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது அளவுக்கு அதிகமாக உணவு உண்பதை தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. வெந்தயத்திலுள்ள மூலக்கூறுகள் கொழுப்பு மூலக்கூறுகளை அழிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது.
இது தவிர, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவையும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.