ஆரோக்கியத்தை தரும் ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள்!

202

ஆரோக்கியத்தை தரும் ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள்!

ஆவாரம் இலை, பூ, பட்டை உடலை உறுதியாக்கும். மேனிக்கு பளபளப்பு தரும். மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இந்த ஆவாரம் பூ. ஆவாரம் இலையை அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை   நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும். வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமடையும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும். குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சம அளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி,  உடம்பில் தேய்த்து ஊற வைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும். ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். தேனும் அளவாக பயன்படுத்தலாம். இது தாகத்தை தணிக்கும் பானமாகவும் இருக்கும்.

ஆவாரம் பூ சாறு உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவும். உடல் கொழுப்பை பக்கவிளைவில்லாமல் குறைக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது அதை தணிக்க ஆவாரம் பூ பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை குடித்து வருவதன் மூலம் காய்ச்சல் குறையும்.

பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் ஆவாரம் பூ பொடி, வெந்தயப்பொடி மற்றும் கற்றாழ ஜெல் மூன்றையும் சரிசமமாக கலந்து உச்சந்தலையில் தடவி விடவும் 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

ஆவாரம் பூ விதைகள் மற்றும் கரிசலாங்கண்ணி இலைகள் சேர்த்த எண்ணெய் இளநரை பிரச்சனைக்கு உதவும்.