உடலில் ஏற்படும் பாதிப்புக்கு பாட்டி வைத்தியம்!

263

உடலில் ஏற்படும் பாதிப்புக்கு பாட்டி வைத்தியம்!

ஒவ்வொரும் நமது உடலை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. அதற்கேற்ப நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு அதனை குணப்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்…

நெஞ்சு சளி:

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சி ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தொண்டை கரகரப்பு:

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு குணமாகும்.

விக்கல்:

நெல்லிக்காய் இடித்து சாறு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

அஜீரணம்:

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்  ஒன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அப்படியில்லை என்றால் கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். வெறும் வெற்றிலை, 4 மிளகு போதும். இவற்றை மென்று தின்றாலே அஜீரணக் கோளாறு சரியாகும்.

வாயு தொல்லை:

தண்ணீர் கொதிக்க வைத்து அதில், வேப்பம் பூவை தூளாக போட்டு உட்கொண்டால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் கூட குணமாகும்.

சரும நோய்:

கமலா ஆரஞ்சு தோலை உறித்து வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

கண் எரிச்சல், உடல் சூடு:

இரவில் தூங்குவதற்கு முன்னதாக தேவைப்படும் அளவிற்கு வெந்தயத்தை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து காலைக்கடன் முடிந்த பிறகு ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தேய்த்து குளித்தால் முடி நன்கு வளர்வதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். அப்படியில்லையென்றால் ஊற வைத்த வெந்தயத்தை மென்று திண்றால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு:

புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் வெண்ணெய் கலந்து குடித்தால் சிறிது நேரத்திலேயே வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

பற் கூச்சம்:

புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஓரிரு நாட்களில் குணமாகும். அப்படியில்லை என்றால், புதினா விதையை வாயில் போட்டு மென்று தின்றால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

இடுப்புவலி:

சாப்பாடு வடித்த கஞ்சியை எடுத்து நன்கு ஆற வைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

வியர்வை நாற்றம்:

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

உடம்புவலி:

சாம்பிராணி, மஞ்சள், சர்க்கரை போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி சரியாகும்.

நினைவாற்றல் அதிகரிக்க:

வல்லாரைக் கீரையை காயவைத்து பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

ஏப்பம்:

அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம் பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து குடித்து வந்தால் குணமாகும்.

வேனல் கட்டி:

கோடை காலங்களில் உடல் சூடு அதிகமாகும் போது வேனல் கட்டி வரும். அது அதிக வலியை கொடுக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பு, சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க அந்த கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

வேர்க்குரு:

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குரு சரியாகும்.