காஞ்சிரபும் ஏகாம்பரநாதர் கோயில் பிரசாதம் குடலை இட்லி ரெசிபி செய்வது எப்படி?
ஒவ்வொரு கோயில்களில் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அரவாணை பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜ பெருமாளுக்கு நெய் முறுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமாக பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் குலசேகரன்படியை தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது என்னவோ தயிர்சாதம் மட்டும்தான்.
சுக்கிரனுக்குரிய ஸ்தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதமாக படைக்கப்படுகிறது. கேரளா மாநிலத்திலுள்ள மகாதேவர் கோயிலில் மூலிகைகளை சாறு பிழிந்து அதனை பாலுடன் கலந்து ஈசனுக்கு படைக்கப்பட்டு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு இட்லி நைவேத்தியமாக படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள சத்ய நாராயணருக்கு கோதுமை ரவை அல்வா பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்திலுள்ள திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மிளகோதரை பிரசாதம் கொடுக்கப்படுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் மோதகம் பிரசாதம் தரப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான பிரசாதம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தப் பதிவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கொடுக்கப்படும் குடலை இட்லி பிரசாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்..
காஞ்சிபுரம் குடலை இட்லி
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – ½ கப்
- இட்லி – ½ கப்
- அரிசி – ½ கப்
- உளுந்து – ½ கப்
- தயிர் – ¼ கப்
- சுக்குத்தூள் – 1 ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
- நெய் – 4 ஸ்பூன்
- முந்திரி – 10
- கறிவேப்பிலை – 2 ஆர்க்குகள்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பை (தோல் நீக்கியது) ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு, தயிர், சுக்குத்தூள், மிளகுத்தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நெய் சேர்த்து கலக்க வேண்டும்.
இட்லி பானையில் மாவு ஊற்றும் குழிகளில் நெய் தடவி மாவு ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இதனை வாழை இலையில் செய்யப்பட்ட கிண்ணங்களில் (குடலை) செய்ததால் குடலி இட்லி என்று சொல்வது உண்டு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் குடலை இட்லி தான் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.