குழந்தைகளுக்கு கண் திருஷ்டி போக்கும் வேங்கை மூலிகை!

638

குழந்தைகளுக்கு கண் திருஷ்டி போக்கும் வேங்கை மூலிகை!

காலங்காலமாக தமிழகத்தில் முன்னோர்களால் சொல்லப்பட்டு வந்த ஒரு பழமொழி உண்டு. அது வேறு ஒன்றும் இல்லை. கல்லடி பட்டாலும் படலாம் ஆனால், கண்ணடி படக்கூடாது. அதாவது, நம் மீது கல் கொண்டு எறிந்தால் அந்த வலியை கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால், கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகளை நாம் தாங்கிக் கொள்ள முடியாது.

இது போன்ற கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சித்தர்கள் எல்லா உபாயங்களையும் தெளிவாக வகுத்துள்ளனர். சிறு குழந்தைகள் சரியாக பால் குடிக்காமல் எந்நேரமும் அழுது கொண்டே இருக்கும். சரியாக தூங்காது. தாய்மார்களின் மார்பில் பால் கட்டிவிடும். பசியின்மை, சோர்வு, அசதி ஏற்படும். இவையெல்லாம் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படும்.

இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் மை தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும். உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை சேகரித்து உரலில் போட்டு இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒரு படி அளவு எடுத்து அதனை ஒரு பானையில் போட்டு 5 படி நீர் விட்டு கலந்து 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த சக்கைகளை சாறு பிழிந்து எடுத்து அந்த நீரை பெரிய தட்டுகளில் ஊற்றி வெயிலில் வைக்க வேண்டும்.

ஓரிரு நாட்களில் அந்த நீரெல்லாம் வற்றி கருஞ்சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மை போன்று இருக்கும். அதனை எடுத்து வைத்துக் கொண்டு சிறிதளவு நீர் விட்டு குழைத்து தினந்தோறும் குழந்தைகளுக்கும், பெண்களும் திலகமாக அணிந்தால் சகல கண் திருஷ்டிகளும், கண் திருஷ்டியினால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும் என்பது ஐதீகம். பேய், பூத கணங்கள் அருகில் வருவதற்கு அஞ்சும். உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை வெட்டி எடுக்கும் போது அதிலிருந்து இரத்த நிறத்தில் ஒரு திரவம் போன்று சிவப்பு கலரில் வடியும். இது தான் உண்மையான உதிர வேங்கை மரத்தின் பட்டை என்பது குறிப்பிடத்தக்கது.