கொசுக்களை விரட்டியடிக்கும் செடிகளை வீட்டில் வளர்க்கலாமா?

138

கொசுக்களை விரட்டியடிக்கும் செடிகளை வீட்டில் வளர்க்கலாமா?

பொதுவாக டெங்கு, மலேரியா பரவுவதற்கு முக்கிய காரணமே கொசு தான். மழைக்காலங்களில் கொசுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன்குனியா, யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், சிகா வைரஸ், சில வகையான வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் வரவுவதற்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்கும்.

இதன் காரணமாக மழைநீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். மேலும், எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பார்கள். கொசுக்களை விரட்டுவற்கு ஆல் அவுட், குட் நைட், சுருள் ஆகியவற்றை நாம் பயன்படுத்துவோம். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆல் அவுட், குட் நைட் ஆகியவற்றிலிருந்து வரும் வாசனை ஒற்றுக் கொள்ளாது.

மேலும், இரவில் தூங்குவதற்கு முன்பாக கையில் கொசுக்கள் வராமல் தடுக்கும் கிரீம்களை பயன்படுத்துவோம். ஆனால், இயற்கையாகவே கொசுக்கள் வராமல் தடுக்கும் செடிகள் என்று பல இருக்கிறது. அதனை நாம் வீட்டில் வளர்க்கலாமா என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

லாவண்டர் என்ற வாசனை செடி கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டுள்ளது. இதற்கு அதிகளவு தண்ணீர் தேவையில்லை. வீட்டில் எளிதாக வளர்க்கலாம். பராமரிப்பதும் மிகவும் எளிது.

சாமந்திப்பூ செடியிலிருந்து வரும் தனித்தன்மை கொண்ட வாசனையை பூச்சிகளும், உயிரினங்களும் விரும்புவதில்லை. இச்செடியை வெயிலில் வளர்ப்பது நல்லது. நிழலில் வைத்து வளர்த்தால் வளர்ச்சி மிகவும் தாமதமாகும்.

அசுவினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், விவசாயத் தோட்டத்திலும் இதை வளர்க்கலாம். சிட்ரோநெல்லா புல் என்ற செடியின் இலைகளை கசக்கினால் எலுமிச்சை மணம் வீசும். இதில் இருந்து எடுக்கப்படும் ‘சிட்ரோ நெல்லா’ எண்ணெய் வாசனை பொருளாகவும், மூலிகைத் திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயை மெழுகுவர்த்தி, விளக்குகளில் ஊற்றி எரித்தோ, சருமத்தில் தேய்த்துக்கொண்டோ கொசுக்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

ஒரு வகை புதினா செடியின் (ஹார்ஸ் மின்ட்) மணம் சிட்ரோநெல்லா புல்லைப் போலவே இருக்கும். வெப்பமான இடங்களிலும், மணற்பாங்கான பகுதியிலும் கூட நன்றாக வளரும். பல்லாண்டு தாவரம் என்பதால், ஒரு முறை நட்டுவிட்டால் நான்கைந்து ஆண்டுகளுக்கு இது கொசுவிரட்டியாக செயல்படும்.

ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் மட்டுமின்றி மற்ற பூச்சி இனங்களும் வீட்டை அண்டாது. இச்செடி அதிக குளிரைத் தாங்காது என்பதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். இவற்றைத் தவிர நமக்கு நன்கு அறிமுகமான வேம்பு, துளசி, கிராம்புச்செடி போன்றவற்றையும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற செடிகளை நம் வீடுகளில் வளர்த்து வந்தால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. கொசுக்களின் தொல்லையும், அதனால் ஏற்படும் பாதிப்பும் இருக்காது என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.