கொய்யாப் பழத்தின் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்!

132

கொய்யாப் பழத்தின் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்!

கொய்யா என்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரம் ஆகும். இந்த குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் கொய்யா என்று அழைக்கப்படுகின்றன. ஒருவிதமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி என்ற கிராமத்தில் தான் அதிகளவு கொய்யா பயிரிடப்படுகிறது.

வெள்ளை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யா என்று கொய்யாப்பழத்தில் இரு வகைகள் உண்டு. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கும் ஏற்ப நல்ல குணங்கள் மாறுபடும். பழத்தில் இருக்ககூடிய சத்துக்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களால் தான் பழங்களின் நிறம் வேறுபடுகிறது.

கொய்யாவில் கலோரி – 24%, புரதச்சத்து – 0.04 கிராம், நார்ச்சத்து – 0.36 கிராம், இரும்புச்சத்து – 0.02 மி.கிராம், கால்சியம் – 3 மி.கிராம், பாஸ்பரஸ் – 28 மிகிராம், மாவுச்சத்து – 11.6 கிராம், கொழுப்பு – 0.30 கிராம், போலேட், பீட்டா, கரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கொய்யா மிகவும் ஏற்றது.

கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொய்யா பழத்திற்கு உண்டு. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழத்தில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாகும். தினம் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி குறைபாட்டைச் சரி செய்ய முடியும். உடலின் சக்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இரவு நேரங்களில் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் கொய்யாப் பழம் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.