கோடை தாக்கம் அதிகம்: சூடு குறைய என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடலமைப்பு இருக்கும். சிலருக்கு சூடான உடலும், சிலருக்கு குளிர்ச்சியான உடலாகவும் இருக்கும். அதிக உடல் வெப்பம் உள்ளவர்களுக்கு கோடை காலம் வந்துவிட்டால் அவர்கள் அதிகளவில் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். அவர்களுக்கான பதிவாக இந்தப் பதிவில் உடல் சூட்டை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தலையில் நல்லெண்ணெய் சூடு போகும் அளவிற்கு தேய்க்க வேண்டும். தேய்த்து 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்த நிலையில் தலையில் சீயக்காய் வைத்து நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். இதனை செய்வதன் மூலம் தலை சூடு குறையும்.
வாரந்தோறும் புதன் அல்லது சனிக்கிழமையில் இந்த முறையை பின்பற்றலாம். பெண்கள் வெள்ளிக்கிழமையில் இந்த முறையை செய்யலாம். தலையில் சூடு அதிகமாக இருப்பவர்களும், அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் கூட இதனை செய்யலாம்.
உடல் வெப்பத்தை குறைப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு, ஆண்மையை அதிகரிக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் தூங்குவதற்கு முன்பு வெந்தயத்தை சிறிதளவு எடுத்து அதனை ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எடுத்து பல் துளக்கி முடித்த பிறகு வெந்தயத்தை மென்று சாப்பிட வேண்டும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க வேண்டும்.
அப்படியில்லை என்றால் கால் கப் வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதனை மறுநாள் காலையில் மை போன்று அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர உடல் வெப்பம் குறையும். முடியும் நன்றாகவும், கருமையாகவும் வளரும்.
உடல் சூடு குறைப்பதில் கரிசலாங்கண்ணி முக்கிய பங்கு வகிக்கிறது. கரிசலாங்கண்ணி இலையை பறித்து அதனை சுத்தம் செய்து அரைத்து வாரத்தில் ஒரு நால் தலையில் தேய்த்து குளித்து வர உடலில் உள்ள சூடு குறையும். மேலும், அதிகளவில் முடி வளரவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் கொண்ட முடி வளரவும் கரிசலாங்கண்ணி பயன்படுகிறது.
நமது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது நமது கடமை ஆகும். வேறு யாரும் நமக்காக நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியுமா? ஆகையால், கோடை வெப்பத்திலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வாரத்திற்கு ஒரு முறையேனும் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.