கோதுமை பாயாசம் ரெசிபி செய்வது எப்படி?

255

கோதுமை பாயாசம் ரெசிபி செய்வது எப்படி?

தென் மாநிலங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள், பண்டிகைகளில் இந்த கோதுமை பாயாசம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். குறிப்பாக கர்நாடகாவில் இது ஸ்பெஷல் ரெசிபி. நமது உடலுக்கும், ஏராளமான நன்மைகளை தரும் இந்த ரெசிபி கண்டிப்பாக பிடிக்கும்.

கோதுமை பாயாசம் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்:

  1. உடைத்த கோதுமை – 1 கப்
  2. உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள்)
  3. வெல்லம் – 1 கப்
  4. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் – 1 கப்
  6. பால் – 1/2 கப்
  7. தண்ணீர் – 3 கப்
  8. பாப்பி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
  9. ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  1. ஒரு பௌலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ள வேண்டும்.
  2. ஒரு குக்கரை எடுத்து கொள்ள வேண்டும். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்க வேண்டும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
  1. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிட வேண்டும்.
  2. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்த வேண்டும்.
  4. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும் போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்க வேண்டும்.
  5. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்க வேண்டும்.
  6. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேக விட வேண்டும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேக விட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிட வேண்டும்.
  7. அடுத்ததாக, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்க வேண்டும்.இறுதியாக கோதுமை பாயாசம் தயார்.