கோரைக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?

58

கோரைக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?

மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாக வளக்ர கூடிய ஒரு மூலிகை தான் கோரைக்கிழங்கு செடி. இந்த கோரை செடியில் பெருங்கோரையை வயல்களில் வளர்த்து பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த செடி தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிரிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும்.

பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும் தான் உண்டு. பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும்.

இது கசப்புத் தன்மை கொண்டிருந்தாலும் நறுமணமாக இருக்கும். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும். இந்த கோரை கிழங்கில் என்னென்ன மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

முகச்சுருக்கம் நீங்கும்:

முகச்சுருக்கம் நீங்க கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும்.

தோல்நோய் குணமாகும்:

பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மேலும் முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். வியர்வை நாற்றத்தை போக்குகிறது.

காய்ச்சலை தணிக்கும்:

கோரை கிழங்கு 5 கிராம் வரை எடுத்து இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் தணியும்.

சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும்:

கோரை கிழங்கு பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. கோரை கிழங்குடன் ஊற வைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைகளை கோரை கிழங்கு சரி செய்கிறது.

உடல் வலியை போக்கும்:

உடல் வலியை போக்கும் கோரை கிழங்கு தைலங்களில் மணத்துக்காக சேர்க்கப்படுகிறது. ரத்தவட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. காய வைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மேலும் நீர்பாங்கான இடங்களில் கோரைக்கிழங்கு எளிதாக கிடைக்கும்.

கிருமிகளை போக்கும்:

கோரை கிழங்கு பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது. மேலும் வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.