சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை களி!

154

சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை களி மற்றும் ஏழு தான்  கூட்டு  செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி –  1 கப்
  2. பாசிப் பருப்பு –  கால் கப்
  3. தேங்காய் – ¼ மூடி (சிறியது)
  4. மண்டை வெல்லம் – 1½ கப்
  5. தண்ணீர் – 2½ கப்
  6. சுக்கு – சிறிதளவு
  7. ஏலக்காய் – 1
  8. நெய் – 2 ஸ்பூன்
  9. முந்திரிப் பருப்பு – 10

செய்முறை:

பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பினை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து, ஆற விடவும்.  ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவை பெரிய ஓட்டை உள்ள சலிப்பில் போட்டு சலித்து கொள்ளவும்.சலித்தது போக மேலே உள்ளவற்றை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலிக்கவும். இவ்வாறு எல்லாவற்றையும் ஒரே பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும். மண்டை வெல்லத்தை 2½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஏலக்காய் மற்றும் சுக்கை பொடியாக்கிக் கொள்ளவும்.வாணலியில் கரைத்து வடிகட்டிய சர்க்கரைக் கரைசலை ஊற்றி மிதான தீயில் வைத்து சூடேற்றவும். பாகு சூடாகி ஆவி வந்ததும் துருவிய தேங்காயை சேர்க்கவும். சர்க்கரைக் கரைசல் நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து சலித்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும்.

பின்னர் அதனுடன் தட்டிய சுக்கு, ஏலக்காயை சேர்த்துக் கிளறவும். இரண்டு நிமிடங்களில் கலவை கெட்டியாகி விடும். கலவை நன்கு திரண்டு வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும். மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரியை போட்டு வறுத்து அதனை களியில் சேர்த்து ஒரு சேரக் கிளறி இறக்கவும். சுவையான திருவாதிரைக் களி தயார்.

ஏழு தான் கூட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
கறிகாய்கள் – பரங்கிக்காய், பூசணிக்காய்,  அவரைக்காய்,  சர்க்கரை வல்லிகிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சை, வாழைக்காய்
காய்கறிகள் நறுக்கியது – 5 கப்
வெந்த துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி – 1-1/2 கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
தனியா – 1/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
மிளகாய் வற்றல் – 6
பெருங்காயம் – சிறிய கட்டி
துருவிய தேங்காய் – 1/4 கப்
தாளிக்க – எண்ணை, கடுகு
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
அரிசிமாவு – சிறிதளவு

செய்முறை:

தனியா, க.பருப்பு, மி.வற்றல், பெருங்காயம், தேங்காயை சேர்த்து எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். காய்கறிகளை தண்ணீரில் போட்டு உப்பு, சாம்பர் பொடி சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் பொடித்த பொடிகளை போடவும்.
புளியை கரைத்து ஊற்றவும் கொதித்த பின்பு சிறிதளவு  வெல்லம் போடவும். இப்போது,  கடுகு, ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த பருப்பை சேர்க்கவும்.  கடைசியாக  அரிசி மாவு கரைத்து ஊற்றவும். பின்னர் மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். அருமையான ஏழு தான் கூட்டு தயார்.