செம்பருத்திப் பூவின் பயன்களை அறிவோம்!

99

செம்பருத்திப் பூவின் பயன்களை அறிவோம்!

 1. செம்பருத்திப் பூ இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதன் தாயகம் கிழக்கு ஆசியா; மலேசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. அதனாலோ என்னவோ சீனா, இது எங்களுக்குச் சொந்தமானது என்று கூறுகிறது. இது ஒருபுறமிருக்க, செம்பருத்தி என்பது வேறு, செம்பரத்தை என்பது வேறு என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரியாது.
 2. செம்பருத்தி என்பது பருத்தியில் ஒருவகை. அது இப்போது அழிந்து போய் விட்டது. செம்பரத்தை என்பதே இன்றைக்கு செம்பருத்தி என அழைக்கப்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.
 3. செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
 4. மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க  உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.
 5. செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.
 6. உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
 7. செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
 8. செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி  குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
 9. செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த  நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
 10. செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
 11. சிலர் காய வைத்த செம்பருத்திப் பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக் கொள்ளலாம்.
 12. பெண்களுக்கு தலைமுடி பிரச்னை பெரும்பிரச்னை. முடி அதிகம் வளர வேண்டுமென்றால் இது கைகொடுக்கும். ஆனால் முடி அதிகம் வளர்ந்து சிலருக்கு ஈறும், பேனும் வந்து மிகுந்த அவதிக்குள்ளாவார்கள்.
 13. அப்படிப்பட்டவர்கள் செம்பருத்திப் பூக்களைப் பறித்து இரவில் தலையில் சூடிக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விட வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் பேன்கள் ஒழிவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கிவிடும்.
 14. இதன் இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.