பழைய சோறு மகிமை: பழைய சோறு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

552

பழைய சோறு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

காலங்காலமாக நமது முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பழைய சோறு, கஞ்சி, கூழ் ஆகிய உணவுகளை உண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்துள்ளார்கள். வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தான் நாம் தேடி தேடி சென்று சாப்பிட்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல், நமது வருங்கால தலைமுறையினருக்கும் இந்தப் பழக்கத்தை கற்று தருகிறோம். இதனால், சிறு வயதிலேயே பல வகையான நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இளம் வயதிலேயே இறந்துவிடும் சூழலும் ஏற்படுகிறது.

இதையெல்லாம் மனதில் வைத்து இந்தப் பதிவு பதிவிடப்படுகிறது. பழைய சோறு சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். முதல் நாள் சாதத்தில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே உடலுக்கு கிடைக்கிறது.

கிராமப்புறங்களில் காலை எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கத்திற்கு பதிலாக நீச்சத்தண்ணி குடிக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. எனது அப்பா இந்த முறையைத் தான் இன்றும் பின்பற்றி வருகிறார். நீச்சத்தண்ணி என்றால் பழைய சோற்று தண்ணீர், நீராகாரம் என்று அர்த்தம்.

இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு எனர்ஜியாகவும் இருக்க வைக்கிறது. காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும், குடல் புண், வயிற்று வலி பிரச்சனையும் சரியாகும்.

சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் புளிப்புச் சுவையை தருகிறது. அதோடு, மிக அதிகளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை தருகிறது. அதுமட்டுமின்றி இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராகவும் இயங்கச் செய்கிறது.

தினந்தோறும் பழைய சோறு சாப்பிட்டு வர உடல் எடையும் குறையும். இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். அலர்ஜி, அரிப்பு ஆகிய பிரச்சனைகளையும் பழைய சோறு சரி செய்கிறது. அல்சர் பிரச்சனையை சரி செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. தோல் தொடர்பான நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.