மகத்துவம் நிறைந்த மருதம் பட்டையின் மருத்துவ குணங்கள்!

143

மகத்துவம் நிறைந்த மருதம் பட்டையின் மருத்துவ குணங்கள்!

பொதுவாக இயற்கை மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கீரைகள், மரங்கள், செடி கொடிகள் என்று எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆனால், அவற்றை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை. இன்றைய பதிவில் மருத்துவ குணங்கள் பொருந்திய மருதம் பட்டையின் நன்மைகள், பயன்கள் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டது’ கூறுகின்றனர். இந்த மரத்தை நம் முன்னோர்கள் சாலை ஓரங்களில் நட்டனர். இப்போதும், சென்னை முதல் செங்கோட்டை வரை செல்லும் சாலையில் அதிமாக இருக்கும் மரங்கள் மருத மரமே. அதன் பயன்கள் என்னென்ன? என்று பார்க்கலாம் வாங்க…

இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம் பட்டைப் பொடிக்கு உள்ளது. மேலும், இதயத்தை வலுவுடன் வைக்கும் ஆற்றல் வெண் தாமரைப் பூவின் பொடியில் உள்ளது. இரண்டு கிராம் அளவிற்கு இரண்டு பொடியையும் எடுத்து வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் அருந்தினால் இரத்தக் குழாய் அடைப்பு வராமல் தடுக்கலாம்.

மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம் பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது. மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊற வைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதம் பட்டையில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகளவில் உள்ளது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு. மருதம் பட்டை – 200 கிராம், சீரகம் – 100 கிராம், சோம்பு – 100 கிராம், மஞ்சள் – 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.

தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும். ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.

மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.

சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து அதில் 2 ஏலக்காய், சுக்கு சேர்த்து காலை, மாலை என்று இரு வேளைகளில் காய்ச்சி காபி, டீக்கு பதிலாக குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும்.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருதம் பட்டை, வில்வம், துளசி ஆகியவற்றை சம அளவில் எடுத்து சூரணம் செய்து காலை, மாலை என்று இரு வேளைகளில் சாப்பிட்டு வர இந்தப் பிரச்சனைகள் சரியாகும்.

மேலும், பயம், தூக்கமின்மை, கோபம் ஆகிய பிரச்சனை உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றலாம்.

வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப்புண் குணமாகும். மேலும் நன்கு உலர்ந்த மருதம்பட்டையை நன்கு பொடித்து அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியான தேதிகளில் வருவதில்லை . அப்படிப்பட்டவர்கள் மருதம் இலைகளை காய வைத்து சூரணமாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.

மூட்டுவலி, இடுப்புவலி பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணெயுடன் மருதம்பட்டைப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து விட்டு ஆறிய பின் வலி உள்ள இடங்களில் மசாஜ் செய்தால் மூட்டுவலி, இடுப்பு வலி சரியாகும். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்களுக்கும் பயன் கொடுக்கும்.

கோடை காலங்களில் உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்கு மருதம் பட்டையை நீரில் ஊறவைத்து குடிக்கலாம்.

மருதம் பட்டையில் உள்ள லிபிட் பெராக்ஸிடேஷன் இரத்தம் உறைதலைத் தடுப்பதோடு இதயத் தசைகளையும் வலுவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.