வரலட்சுமி விரதத்தன்று செய்ய வேண்டிய கஜூர்க்காய் ரெசிபி!

85

வரலட்சுமி விரதத்தன்று செய்ய வேண்டிய கஜூர்க்காய் ரெசிபி!

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், துருவிய வெல்லம் – 2 கப், வெள்ளை ரவை, தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை – தலா கால் கப், வெண்ணெய் –  ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை எள், உடைத்த முந்திரித் துண்டுகள் –  தலா 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைக்க வேண்டும். வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்க வேண்டும். அகலமான பாத்திரம் ஒன்றில் மைதா மாவு, ரவை, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து கால் மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக திரட்டிக்கொள்ள வேண்டும்.

துருவிய வெல்லத்துடன், உடைத்த பொட்டுக்கடலை, வறுத்த தேங்காய்த் துருவல், வறுத்துப் பொடித்த எள், ஏலக்காய்த்தூள், முந்திரித் துண்டுகள் சேர்த்து நன்றாகக் கலந்தால் பூரணம் தயார். திரட்டி வைத்துள்ள வட்டங்களின் நடுவே 2 டீஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து மூடி ‘மோதகம்’ வடிவில் செய்ய வேண்டும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மோதகங்களை போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.

குறிப்பு வரலட்சுமி விரதத்தன்று இந்த கஜூர்க்காயை அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.