வாய்ப்புண், உடல் வறட்சி நீங்க ஊசிப்பாலை!

122

வாய்ப்புண், உடல் வறட்சி நீங்க ஊசிப்பாலை!

ஊசிப்பாலை என்பது கீரை வகையைச் சேர்ந்த ஒரு வகை மூலிகை. நெற்பயிர்களின் இடையிடையில் தான் களைச்செடியாக வளர்ந்து காணப்படும். பால் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், இது பாலை வர்க்கத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

இதனுடைய கொடியில் எஸ்குலன்டின், ஆக்ஸிஸ்டெல்பின், ஆக்ஸிசின், கார்டினோலைட், ஆக்ஸிடெல்மோசைடு போன்ற சத்துக்கள் செல்களில் நீர்ச்சத்தை தக்கவைத்து உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கிறது. வெயில் காலங்களில் அளவுக்கு அதிகமாக நீர் வெளியேறும். இதனால், உடல் சோர்ந்து, வறண்டு காணப்படும். அப்போது, இந்த ஊசிப்பாலை எடுத்துக் கொண்டால் உடலுக்கு குளிர்ச்சியும், போதுமான அளவு நீர்ச்சத்தையும் கொடுக்கிறது.

கோடை காலத்தில் உடல் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகும். இதனால்,உடலில் பலவிதமான கொப்புளங்கள், காய்ச்சல், சளி, சரும கோளாறு போன்ற வியாதிகள் உண்டாகும். அப்போது, ஊசிப்பாலை கீரையை சமைத்து சாப்பிட்டு வர கண் குளிர்ச்சி உண்டாகும், உடல் ஆரோக்கியம் பெறும். உடல் சூட்டை தணித்து மருந்தாக மட்டுமல்லாமல், உணவாகவும் பயன்படும் ஒரு வகையான அற்புத கீரை வகையைச் சேர்ந்த மூலிகைதான் இந்த ஊசிப்பாலை. உடல் சூட்டால் உண்டாகும், வாய்ப்புண் நீங்க ஊசிப்பாலை இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் நீங்கும். இது தவிர, ஊசிப்பாலை இலைகளை கசாயம் வைத்தும் குடித்து வரலாம்.

மேலும், ஊசிப்பாலை இலைகளை சமையல் செய்தும் சாப்பிடலாம். சாதாரணை கீரையை எப்படி சமையல் செய்து சாப்பிடுகிறோமோ அதன்படி செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.