தட்டைப்பயறு கத்தரிக்காய் குழம்பு

210

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பயறு வகைகளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கின்றன. பயறு வகைகளில் மிகவும் சுவையானது தட்டைப்பயறு. இந்த தட்டைப்பயறை கத்திரிக்காயுடன் சேர்த்து குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

தட்டைப்பயறு – 200 கிராம்

கத்திரிக்காய் – 10

பெரிய வெங்காயம் – 4

தக்காளி – 4

மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்

புளி – 2 எலுமிச்சை அளவு

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பு ன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

தட்டைப்பயறு கத்தரிக்காய் குழம்பு செய்வதற்கு முதலில் குக்கரில் தட்டைப்பயறை போட்டு, தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு வேக வைத்து நீரை வடித்துவிட்டு பயறை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து பெரிய வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயை நீள நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சு டானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயமும், தக்காளியும் நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவும்.

பின்பு அதில் சிறிதுளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், வேக வைத்துள்ள தட்டைப்பயறை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும், அதனுடன் வடித்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், தட்டைப்பயிறு கத்திரிக்காய் குழம்பு ரெடி.