கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை

0 363

கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை

 மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் கீர்த்தி பெற்றது திருச்செந்தூர். இங்கு மூலவர் தவக்கோலத்தில் கடற்கரை ஆண்டியாகக் காட்சி தருகிறார். ஆறுமுகப் பெருமானோ இச்சா, கிரியா, சக்தி என்றும் இரு மனைவியரோடு செந்திலாண்டவனாகக் காட்சி தருகிறார். கடலும், நாழிக்கிணறும் சிறந்த தீர்த்தங்கள். ஆணவச் சூரனை அழித்த இடம் ஆதலின் சஷ்டி நோன்பு கொள்ளச் சிறந்த இடம் திருச்செந்தூரேயாகும்.

 உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம்.

 ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களால் கட்டப்பட்டது ஆன்மா. ஆனைமுகச்சூரனை முருகன் வெல்வது மாயையை ஒழிப்பதாகும். சிங்கமுகச் சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகும். சூரபதுமனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகும். உண்ணா நோன்பு கொள்ள ஆணவம் அடங்கும். ஆன்மா ஆண்டவனோடு ஒன்றுபடும். இந்தத் தத்துவத்தை விளக்குவதே சஷ்டித் திருவிழா.

விரதம் கொள்ளும் முறை:

 சஷ்டி விரதமிருப்பவர் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபடவேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும். இது கந்த புராணம் கூறும் முறை.

 உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

 உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன.

 வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன.

 காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல்
செயல்களிலும் இது நிகழ்கிறது.

வேள்விக்கூடம்:

 வேள்வி(யாக) சாலையிலே அக்கினி, கும்பம், பிம்பம் ஆகிய மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்கின்றனர். செந்தில் நாயகர் மூலவரின் பிரதிபிம்பம்) வள்ளி தெய்வானை நாச்சிமாரோடு பிம்பமாக எழுந்தருளுகிறார். கும்பங்களுக்கு முன்னே ஓமத்தீ வளர்த்து, அதில் முருகனை எழுந்தருளச் செய்து, அபிஷேகப் பொருள்கள், பிரசாத வகைகள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை அக்கினியில் படைப்பது சிறப்பு. மருந்துப் பொருள்களின் புகையை உட்கொள்வது உடலுக்கு நல்லது.

 யாகத்தை நிறைவு செய்யும் போது .. பூரணாகுதி .. என்று ஒரு தட்டில், பட்டு, வெற்றிலை பாக்கு, நவமணிகள், தங்கம், வெள்ளி, தேங்காய் முதலியவற்றை வைத்து, நாதசுரம் பஞ்ச வாத்தியம் வேதம் முழங்க அக்கினியில் இடுவர். சுற்றிலுமுள்ள கும்பங்கள் தேவர்களையும், வேதங்களையும் குறிக்கும். அக்கினியின் முன் சிவன், பார்வதிக்குரிய கும்பங்கள் உண்டு. மேடையில் ஒரு பெட்டியில் சஷ்டித் தகடுகள் வைக்கப்பட்டிருக்கும். அவை ஆறாவது நாள் இரவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

திருவுலா:

 உச்சிகாலத் தீபாராதனை முடிந்ததும் யாக சாலையில் தீபாராதனை நடைபெறும். பின் செந்தில் நாயகர் எழுந்தருளுவார். வேல் வகுப்புப் பாடி பக்தர் படைசூழ வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. சண்முக விலாசத்தில் அவரை எழுந்தருளச்செய்து தீபாராதனை நடைபெறும்.

சாயாபிஷேகம்:

 சஷ்டியன்று இரவில் செந்தில் நாயகரை 108 மகாதேவர்முன் (இரண்டாம் பிரகாரத்தில்) அமர்த்தி, யாக சாலையிலுள்ள கும்பத்தின் நீரைக்கொண்டு வருவர். செந்தில் நாயகர் முன் கண்ணாடியைப் பிடித்து, கண்ணாடிக்கு முன் அபிஷேகம் நடைபெறும். இது சாயா (நிழல்) அபிஷேகம் எனப்படும்.

திருமணம்:

 ஏழாம் நாள் தெய்வயானை திருமணம். அன்று மாலை குமரவிடங்கப் பெருமான் (ஆறுமுகப் பெருமானின் பிரதி பிம்பம்), திருமணத்திற்கு எழுந்தருளுவார். மாலையில் தெற்குரத வீதியில் காட்சி கொடுத்து மாலை மாற்று நடைபெறும். இரவிலே திருமண நிகழ்ச்சி கோவிலில் நடைபெறும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.