மஹா பெரியவாளின் மூன்று கட்டளைகள்

0 365

தினமும் 3 வேளை சந்தியா வந்தனம் செய்.

சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்.

ஏகாதசி உபவாசம் இரு.

1. சந்தியா வந்தனம்:

 images

 தினமும் 3 வேளை கண்டிப்பாக சந்தியா வந்தனம் செய்யவேண்டும். விட்டுப்போனதை கணக்கில் வைத்துக்கொண்டு பிறகு செய்யவேண்டும். அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ விடாமல் செய்ய வேண்டும். (இது முசிறி பெரியவா சொன்னது). மஹா பெரியவா தன் வாயால் அவரை மகான் என்று சொல்லியிருக்கிறார்.

2. சஹஸ்ர காயத்ரி ஜபம்:

japa-yoga

 மஹா பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதுவும் சஹஸ்ர காயத்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார். ரிடையர் ஆன ஒருவருக்கு இப்படி உபதேசம் செய்கிறார். “தினமும் சஹஸ்ர காயத்ரி செய்துகொண்டு வா. இது பரத்துக்கு. போஸ்ட் ஆபீசில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய். அவர்கள் கொடுக்கும் பணம் போதும் இகத்துக்கு.”

 இந்த உபதேசம் அவருக்கு மட்டும் இல்லை. நம் எல்லோருக்கும் தான். ரிடையர் ஆவதற்கு முன் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்றாவது சஹஸ்ர காயத்ரி பண்ணு என்று சொல்லியிருக்கிறார்கள். இதை முடிந்தவரையில் நாம் கடைபிடிப்போமே.

 தினமும் 1 மணி நேரம் கிடைத்தால், டிவி பார்ப்பதை தவிர்த்து விட்டு இதை செய்தால் மஹா பெரியவா கட்டளைப்படி நடந்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். சொல்வது எளிது செய்வது கஷ்டம் என்றுதானே நினைக்கிறீர்கள்? நான் ஒரு வழி சொல்கிறேன்.

 தினமும் காலையிலோ மாலையிலோ 1 மணி நேரம் கிடக்கும்போது, குளித்துவிட்டு சுத்தமான உடை (பஞ்சகச்சம்) அணிந்துகொண்டு, ஒரு அமைதியான இடத்தில் ஆசனம் போட்டு கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு நோக்கி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு ஆரம்பிக்கவும். நமது உள்ளங்கையை மேருவுக்கு ஒப்பாகச் சொல்வார்கள். ஒரொரு விரலிலும் 3 பாகங்கள் உண்டு. மோதிர விரல் நடு பாகம் 1 என்று கொண்டால் அடிப்பாகம் 2. சுண்டுவிரல் 3,4,5 (அடி, நடு, மேல் ), மோதிர விரல் நுனி 6, நடுவிரல் நுனி 7, ஆள்காட்டி விரல் 8,9,10 (மேல், நடு, அடி ). பிறகு 11 லிருந்து 20 வரை ஆள்காட்டி விரல் அடியிலிருந்து மோதிர விரல் நடு பாகம் வரை சென்று பூர்த்தி பண்ணவேண்டும். ஒரொரு எண்ணிக்கைக்கும் ஒரு காயத்ரி என்று சொன்னால் 20 எண்ணிக்கை வரும். இப்படி செய்தால் ஒரு முறை மேருவை (ஆதி பராசக்தி ஆட்சி செய்கிறாள் ) வலம் வந்ததிற்கு ஒப்பாகும்.

 நாம் மேருவைப் பார்த்ததில்லை. அதனால் நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். திருவண்ணாமலையை மேருவாக உருவகம் செய்துகொண்டு செய்யலாம்.

1. கோவில் வாசலில் நமஸ்காரம் செய்தல். ( கிழக்கு கோபுர வாசல் )

2. தெற்கு வாசலில் பிள்ளையார் தரிசனம்.

3. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நமஸ்காரம்.

4. ரமண மகரிஷி தரிசனம்.

5. யமலிங்க தரிசனம்.

6. நந்திஎம்பெருமான் தரிசனம்.

7. மகாவிஷ்ணு தரிசனம்.

8. ஆஞ்சநேய சுவாமி தரிசனம்.

9. கிரிவலம் செல்லும் பாதை.

10. ஆதி அண்ணாமலையார் சன்னதி. (ப்ரம்மா ஆதியில் வழிபட்ட லிங்கம்)

11. ஆதி அண்ணாமலையாருக்கு நமஸ்காரம்.

12. வடக்கு கிரிவலப் பாதை. ஒரு மொட்டை கோபுரம் வரும்.

13. குபேர லிங்க தரிசனம்.

14. இடுக்கு பிள்ளையார்.

15. பஞ்சமுக தரிசனம்.

16. ஈசான்ய மூலை.

17. கிழக்கு கிரிவல பாதை.

18. கிழக்கு கிரிவல பாதை.

19. கோபுர வாசலை நெருங்குகிறோம்.

20. கிழக்கு கோபுர வாசலை அடைகிறோம்.

மேற்க்கண்டவை கிரிவலம் செய்தவர்க்கு புரியும்.

இப்பொழுது மூச்சுப் பயிற்சியைப் பார்ப்போமா?

 நாம் சாதாரணமாக மூச்சு விடுவது வயிற்றிலிருந்து இருக்கவேண்டும். (அப்டாமினால் பிரீதிங்). ஒரு கையை வயிற்றிலும் ஒரு கையை நெஞ்சிலும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சை வெளியே விடும்போது கீழ் கை உள்ளே போகவேண்டும். மூச்சு உள்ளே இழுக்கும்போது கீழ் கை வெளியே போகவேண்டும். பிறகு மேலும் மூச்சு இழுக்கும்போது, மேல் கை ( நெஞ்சில் இருக்கும் கை) வெளியே வரவேண்டும். மூச்சு வெளியே விடும்போது முதலில் மேல் கை உள்ளேயும் பிறகு வயிற்றில் இருக்கும் கை உள்ளேயும் போகவேண்டும். இதுதான் ஆழ்நிலை மூச்சு (டீப் பிரீதிங் ). புரிந்ததா? இதை விடாமல் பயிற்சி செய்யவும். இதுதான் மனதையும், உடலையும் மூளையையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ளும் ஒரே வழி. கை வைத்துக்கொள்வது பயிற்சிக்காக மட்டுமே. நாளடைவில் உங்களை அறியாமலே அப்டாமினால் பிரீதிங் கைகூடும்.

நாம் மறுபடியும் கிரி வலத்துக்கு வருவோம்.

 1–20 காயத்ரி. மூச்சை உள்ளே இழுத்து விட்டு ஆரம்பிக்கவும். முடியும் வரை இழுத்துப் பிடிக்கவும். 7 அல்லது 8 க்குப் பிறகு காயத்ரி சொன்னவாறே மெதுவாக மூச்சை வெளியே விடவும். மீண்டும் 11 லிருந்து 20 வரை ஒருமுறை இழுத்து அடக்கி விடவும். இது ஒரு கணக்கு. ஆரம்பத்தில் 3 அல்லது 4 முறை ஆழ் மூச்சு விடவேண்டியிருக்கும். பழக்கத்தில் சரியாக வந்துவிடும். எதையுமே 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும் என்று சொல்வார்கள். (ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள் )

 எதிரே ஒரு ஆசனம் போட்டு 10 நெல் அல்லது மணி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி 1 முறை (1-20) செய்தால் இடது கையில் ஒரு விரலை மடக்கிக் கொள்ளுங்கள். இப்படியாக 5 முறை செய்தால் 100 எண்ணிக்கை வரும். ஒரு நெல் வைக்கவும். இடது பக்கம் 3, மேலே 3, வலது பக்கம் 3 வைத்தால் ஒரு சிவ லிங்கம் வரும். 10 ஆவது நெல்லை கீழே ஆவுடையாக வைத்துவிடுங்கள் . இப்பொழுது 1000 காயத்ரி முடிந்தது. மேலும் ஒரு 8 சொல்லி, நைவேத்யம் செய்து ருத்ரம் சொல்லி பூர்த்தி பண்ணிவிடுங்கள்.

 இப்படி கிரிவலம் செல்லும்போது நாம் மட்டும் செல்லாமல் மானசீகமாக நம் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லவும்.

மேற்கண்ட முறையில் பல நன்மைகள் உள்ளன. அவை என்னெவென்று பார்ப்போமா?

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்வார்கள். நாம் இப்போது 50 தடவை கிரிவலம் செய்திருக்கிறோம்.

நம் குடும்பத்தினரையும் அழைத்து சென்றிருக்கிறோம்.

100 தடவை ஆழ் மூச்சு எடுத்திருக்கிறோம். அதனால் உள்ள பலன்கள் அநேகம்.

இதனால் வாயிற்று தசைகள் பலப்படிருக்கின்றன.

தொப்பை குறையும்.

நிமிர்ந்து உட்காருவதனால் முதுகுத் தசைகள் பலப்படிருக்கின்றன.

50 தடவை மகான்கள், தெய்வ சந்நிதிகள் தரிசனம்.

மனதை ஒருநிலைப் படுத்தும் பயிற்சி.

 விரல்களின் ஒவ்வொரு இடமும் மலையின் ஒவ்வொரு இடத்தை நினைவுப்படுதுவதால் நம் கவனம் சிதறும்போதேல்லாம் வந்து சேர்ந்து கொள்ளலாம். ( நம் எண்ணம் நடுவில் எங்கெல்லாமோ செல்லும். நமக்கு பிடிக்கதவனை நினைத்து அவனுக்கு சாபம் கொடுக்கும் அளவிற்கெல்லாம் சென்றுவிடும்! ). கவலை கொள்ள வேண்டாம். மனதை ஒருநிலைப் படுத்துவதற்கு இந்த பயிற்சி கைகொடுக்கும்.

 இது 1 மணி ஜபம். அந்த சமயித்திலாவது கெட்ட சிந்தனைகள் இல்லாமல் சத்சங்கத்தில் இருப்போம்.

 இப்படி அதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். திருவண்ணாமலை ஒரு உதாரணத்துக்காகத்தான் சொன்னேன். எனக்கு நன்கு பரிச்சயம் உள்ளதால் அதை வைத்துக்கொண்டிருக்கிறேன். சிறு வயது முதல் அங்கு செல்வதுண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சென்றுவிடுவேன். அதுபற்றி பிறிதொருமுறை சொல்கிறேன்.

 உங்களுக்கு நன்கு பரிச்சயமான நன்கு மனதிற்கு இதமான ஒரு கோவிலோ அல்லது ஒரு க்ஷேத்ரமோ, மலையோ சிவா விஷ்ணு பேதமில்லாமல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமானது சஹச்ர காயத்ரி. அதை ஆரம்பித்து வைராக்யமாய் விடாமல் லோகக்ஷேமத்துக்கு செய்துவருவது ரொம்ப முக்கியம்.

III. ஏகாதசி உபவாசம்:

Sculptures

 மகான் சொல்லியது. “ஏகாதசி அன்று உபவாசம் இருங்கோ. மத்த நாள் அளவோடு சாப்பிடுங்கோ”. இதை கடைபிடித்தால் நம் மனமும் உடம்பும் ஆரோக்யமாக இருக்காமல் எப்படி இருக்கும்? ஏகாதசி அன்று ஒன்றும் சாபிடாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் அதன் மகிமையை உணர முடியும். முதலில் நம் வயிறு குறைய ஆரம்பிக்கும். வயிறின் அளவு குறைவதால் மறுநாள் நாம் கொஞ்சமாக சாப்பிட்டாலும் நிறைவாக உணருவோம். அதன் பிறகு வயிற்றைப் பெருக்காமல் குறைவாக உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் ஏப்பம் வரும்போது நிறுத்திக்கொள்ளவேண்டும். பசித்து சாப்பிடவேண்டும். நிதானமாக ரசித்து ருசித்து அளவோடு சராசரி விகிதத்தில் ஆரோக்யமான உணவு உட்கொள்ளவேண்டும். இரண்டு உணவுக்கு நடுவில் எதுவும் சாப்பிடக்கூடாது. அளவோடு தாகத்துக்கு தண்ணி குடியுங்கள். இப்படி விரதம் இருந்து பழகினால், இதை திங்கலாம் அதை திங்கலாம் எண்று அலையும் மனம் அடங்கும். இது ஆத்ம விசாரத்துக்கு உதவும்.

மேலே சொன்ன பெரியவாளின் மூன்று கட்டளைகளையும் கடைபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இது கடைசிவரை நீடிக்க அந்த பரம்பொருளின் அனுக்ரஹத்தை யாசிக்கிறேன். ஆன்மீக நாட்டம் எந்த விதத்திலேயாவது பலருக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற ஆசையில் மஹா பெரியவாளின் ஆக்ஞைப்படி இன்று ஏகாதசி புண்ணிய நாளில் இதை எழுதுகிறேன்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.