ஒரு இளைஞன் எப்படி பாம்பாட்டி சித்தரானார்?

412

ஒரு இளைஞன் எப்படி பாம்பாட்டி சித்தரானார்?

சித்தர்களின் நோக்கம் என்ன? சித்தர்கள் என்பவர்கள் யார்? மனிதர்களாக பிறந்த ஒவ்வொராலும் சித்தர்களாக முடியுமா? என்று பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். சித்தத்தை அடக்கி ஆண்டவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலகை, பிரபஞ்சத்தை, உலக ரகசித்தை, உயிரின் தத்துவத்தை என்று பலவற்றையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொராலும் சித்தர்களாக முடியும் என்பது உண்மை. ஏனென்றால், சித்தர்களும் மனிதர்களாக பிறந்து இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். அப்படி வாழ்ந்தவர் தான் பாம்பாட்டி சித்தர்.

கார்த்திகை மாதம், மிருகசீரிடம் நட்சத்திரத்தில் மிதுன ராசியில் பாம்பாட்டி சித்தர் பிறந்தார். ஜோகி என்ற இருளர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கண் பார்வையற்றவர் என்று கூறப்படுகிறது. பிழைப்புக்காக பாம்புகளை உயிருடனோ அல்லது கொன்றோ வைத்தியர்களிடம் கொடுத்து பசியாற்றி வந்தார்.

எப்படிப்பட்ட கொடிய விஷமுள்ள பாம்புகளை அசால்ட்டாக பிடித்து விடுவார். அதனால், தான் என்னவோ, நவரத்தினம் போல் ஜோலிக்கும் பாம்பு இருக்கிறது. அந்த பாம்பின் விஷம் வேண்டும் என்று வைத்தியர்கள் பாம்பாட்டி சித்தரிடம் கேட்டுள்ளனர். அவரோ, அதிக காசு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில், அந்த பாம்பை தேடி காட்டுக்குள் சென்றார்.

அப்போது, பிரகாசமான ஒளியுடன் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டுள்ளார். மின்னும் அந்த பாம்பின் ஒளியில் அப்படியே மெய்மறந்து நின்றார். சிறிது நேரத்திலேயே அந்த பாம்பு, சித்தராக வடிவெடுத்து நின்றது. அவர் தான் சட்டை முனி சித்தர். இந்த சட்டைமுனி சித்தர், பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டி, உலக நியதியை எடுத்துரைத்தார். அதன்பின், தனது பாவங்களை உணர்ந்த பாம்பாட்டி சித்தர், பாம்பு புற்றுகளை இடிப்பதற்காக வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் தூக்கி எறிந்தார்.

இதைக் கண்ட சட்டைமுனி சித்தர், இளைஞனே இனி நீ காணப்போகும் உலகம் உன்னை நாடி வரும். நல்லவர்களுக்கு நன்மை செய், தீயவர்களை அண்ட விடாதே என்று கூறி மறைந்தார். அன்று முதல் தவம் இருந்து குண்டலினியை உணர்ந்தார். அதன் பின், அவரது உடல் தேஜஸ் பெருவதை அவர் அறிந்தார். குண்டலினியின் சக்தியை பெற்றார். மண்ணை அள்ளும் போது அது பொன் ஆனது. கற்களை எடுக்கும் போது நவரத்தினங்களாக ஜொலித்தது. இரும்பை தொட்டார், தங்கமாக மின்னியது. தங்கம் மற்றும் நவரத்தினங்களை கஷ்டப்படும் ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவினார்.

வாழ்க்கை நெறியையும், வாழும் தத்துவத்தையும் உணர்த்தும் விதமாக அவர் எழுதிய பாடல் இதோ…

நாதர்முடி மேல் இருக்கும் நாகப்பாம்பே

நச்சுப்பை வைத்திருக்கும் நல்ல பாம்பே

பாதாளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே

பாடிப் பாடி நின்று விளையாடும் பாம்பே

என்ற பாடலை பாம்பின் சிறப்பு என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

பல அற்புதங்களை நிகழ்த்திய பாம்பாட்டி சித்தர் தனது 163 ஆவது வயதில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. அதோடு, சங்கரன்கோயில் பகுதியில் உள்ள புளியங்குடி சாலையில் தான் இவர் சமாதி ஆனார் என்று சொல்லப்படுகிறது. மருதமலை கோயிலில் பாம்பாட்டி சித்தரின் சன்னதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.