கணக்கேயில்லாத ஆயுள் கொண்ட காகபுஜண்டர்!

879

கணக்கேயில்லாத ஆயுள் கொண்டவர் காகபுஜண்டர்!

சித்தர்களில் 18 சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். ஏனென்றால் அறிவியல், பிரபஞ்ச ரகசியம், சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தையும் அறிந்து வைத்திருந்தனர். திருமூலர், பாம்பாட்டி சித்தர், போதகுரு, நந்தி தேவர், கமலமுனி, கொங்கணர், சட்டைமுனி சித்தர் என்று 18 சித்தர்கள் மிகவும் பிரபலம். இந்தப் பதிவில் கணக்கேயில்லாத ஆயுள் கொண்ட காகபுஜண்டவர் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அதோ….  நாரதர்….  இதோ….  வசிஷ்டர்….. உலகிலேயே உயர்ந்த தவ ராஜாக்கள் நிறைந்த ஒரு உயர்ந்த மகரிஷியின் உரை. அவரது பெயரோ சதாதபர். அனைவருமே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிரஞ்சீவிகளாக இருப்பவர்களின் திவ்ய சரித்திரம் என்பது தான் தலைப்பு.

சதாதபரின் சத்சங்கம் கலை கட்டியது. உயர்ந்த ஞானிகளே….மாமேருவின் உச்சியில் காட்சிக்கினிய ஒரு கற்பக மரம் உள்ளது. அந்த மரத்தின் உச்சியில் ஒரு பெரிய கூடு உள்ளது. அந்தக் கூட்டில் ஒரு பெரிய காகம் உள்ளது. அதனுடைய பெயரோ புஜண்டர். அதனை காகபுண்டர் என்று அழைக்கிறார்கள். சாபத்தின் காரணமாகவே காகமானவர் தான ஞானசித்தர். அவரை மிஞ்சிய ஞானசித்தர்கள் யவரும் இல்லை. அளவிட முடியாத ஆயுளைக் கொண்டவர் உரோமர்.

அவரது குரு தான் காகபுஜண்டர். எல்லையற்ற ஆயுள் விரிந்த அறிவு முக்கால் ஞானம் கொண்ட சிரஞ்சீவி காகபுஜண்டர். சித்தர்கள் குறித்து பேசுபவர் உள்ளம் பூரிப்படைவதும், கேட்பவர் உள்ளர் குதூகலிப்பதும் இயற்கையே. அது இறையருல் வகுத்த நீதி….அதுவே நியதியும் கூட. காகபுஜண்டரின் பெருமைகளை சதாதபர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வசிஷ்டருக்கு நிலை கொள்ளவில்லை. உடனே அவரைப் பார்க்க தரிசிக்க ஆவல் கொண்டார்.

ராம பிரானின் ஞான குருவான வசிஷ்டர் அந்தக் கூட்டம் முடிந்த கையோடு மேருமலைக்கு புறப்பட்டார். மலைகளாலும், குகைகளாலும் மரம் செடி கொடிகளாலும் நிறைந்து ஓர் ஞானியைப் போன்று விஸ்வரூபமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அந்த மேருமலையை ரசித்தபடி வசிஷ்டர் கற்பகமரம் தேடி அலைந்தார். வேதவல்லுனரே வாருங்கள்….ஈடில்லாத மாமுனியே… என்று காக உருவத்திலிருந்த காகபுஜண்டர் வரவேற்றார். பறவைகளின் அரசே, உங்களைப் பற்றித்தான் தேவலோகத்தில் ஒரே பேச்சு…..எத்தனை கால வாழ்க்கை….. எத்தனை பிறவி, எத்தனை அனுபவ ஞானம்….இருந்தும் எவ்வளவு அமைதி…..

தாங்களைப் பற்றி நிறைய அறிய ஆவல் கொண்டே நேரில் வந்தேன். உங்களது ஆயுட்கால அனுபவத்தை ஞானத்தை தத்துவத்தை அறிந்து கொள்ளவே வந்துள்ளேன். ஞான நிலையின் உச்சத்திலிருந்து ஞானமுனி வசிஷ்டர் கேட்க கற்பகத் தருவின் உச்சியிலிருந்த காகபுஜண்டர் தலையசைத்தார்.

காகபுஜண்டர் சொன்ன பதில்களால் அசையாத வசிஷ்ட முனிவரே அசைந்தார். அவர் சொன்ன வரலாறு கேட்பவர் எவரையும் அசர வைக்கும் வல்லமை கொண்டது. என் வரலாறு யாருக்கும் பிரமிப்பு தரும். அதில் என் ஆயுள் வரலாறு எப்படிப்பட்டவருக்கும் மயக்கம் தரும். சீர்காழி  மாயூரநாதனே எனக்கு அருள் தந்து ஆயுள் தந்து வடிவு தந்து காத்து வரும் நாத பிரான்.

பல கோடி யுகங்கள் கண்டவன் நான். யுகம் பற்றிய கணக்கு ஒன்று உண்டு. கேளுங்கள்….அதுவே பிரமிப்பூட்டும். மொத்த யுகங்கள் 18. ஒவ்வொன்றும் பல கோடி வருடங்கள். அறியுகம்14 கோடி வருடங்கள். அற்புதனர் யுகம் 10 கோடி ஆண்டுகள். தர்ம யுகம் 12 கோடி ஆண்டுகள். ராசி யுகம் 16 கோடி வருடங்கள். வீராசன் யுகம் 20 கோடி. விண் யுகம் 16 கோடி. வாயு யுகம் 7 கோடி. மைன யுகம் 6 கோடி. இவ்விதம் தொடங்கி கலியுகம் 4 கோடியே 72 ஆயிரம் ஆண்டுகள்.

18 யுகங்கள். ஒரு கல்பம். இந்த கல்பம் 15 சேர்ந்தால் அது இந்திரனின் ஒருநாள். இந்திரன் கணக்கில்  60 வருடம் சேர்ந்தால் அதன் பேர் ஆண்டு யுகம். 18 ஆண்டு யுகம் ஒரு பிரளயம். ஒரு லட்சம் பிரளயம் ஒரு நாள் பெருக்கம். 16 நாள் பெருக்கமே இந்திரன் ஆயுள்.  7000 கோடி நாள் பெருக்கு வகோர முனிவரின் ஆயுள். வகோர முனிவரின் 8 கோடி நாள் நாத முனியின் ஆயுள். நாத முனியின் ஒரு கோடி நாள் விஷ்ணு முனிக்கு ஆயுள்.” இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு முனிவருக்கும் அவர்தம் ஆயுள் பற்பல கோடி பல்லாயிரம் கோடி  கூடி வரும்.

அந்த வகையில் பார்துமா முனிவர் பல்லாயிரம் கோடி ஆயுட்காலம் பெற்றவர். மூன்றரை கோடி உரோமம் உதிர்ந்தால்  அவர் ஆயுள் நிறையும். அது பற்பல பல்லாயிரம் கோடிகள் என வரும் போது திருமால் சங்கரர் மகா விஷ்ணுவின் ஆயுள்கள் பூரணமாகும்.

இப்படி யுகக் கணக்கு இருக்கையில்  என் ஆயுளை  நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இது நம்ப முடியாததாக இருக்கலாம்.

ஆனால் இதுவே உண்மை. இது இறையருள் கணக்கு. இதற்கு ஒரு தற்காலிக சாட்சி நானே. உரோமரிஷி  என் புதல்வனே…! சீடனே…!! உங்களுக்கு தெரியுமா? காலக் கணக்கில் வரும் உரோமம் இதுவரை எனக்கு ஒரு முறை கூட உதிரிந்தது இல்லை. என் நீண்ட ஆயுளில் நான் கண்டதைச் சொல்கிறேன்… செவிமடுத்துக் கேளுங்கள். மாயூர நாதனைத் தரிசிக்க உமாதேவி மயில் வடிவம் கொண்டு மாயூரம் வந்து பூஜை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அப்படி இரண்டு முறை இறைவியைப் பார்த்த பாக்கியசாலி நான்….

ஆதியில் பிரமனுக்கு ஐந்து முகங்கள் இருந்தன. ‘சிவனைப் போலவே எனக்கும் ஐந்து முகம் எனவே நானும் சிவனும் சரி சமம்’ என்று பிரம்ம தேவன் கர்வம் கொண்டிருந்தான். கர்வத்தின்  விளைவு? இறைவனின் திருவருளால் அவனது ஒரு தலை கொய்யப்பட்டது.  நடுத்தலை இழந்த பிரமன் நான்முகன் ஆனான் ஐந்து தலைகளோடு மாயூரம் வந்து சிவபூஜை செய்த பிரமதேவனை நான் ஒன்பது பிறவியாய்  ஒன்பது முறை ஒன்பது பிரமனை பார்த்திருக்கிறேன். அதன்பின் நான்கு தலைகளோடு நான்முகன் வந்து சென்றதை பத்து முறை பார்த்திருக்கிறேன்.

மகாவிஷ்ணு கூட ஆதிகாலத்தில் வெண்மை நிறத்தில் இருந்தார். பாற்கடலைக் கடைந்தபோது பக்தர்களைக் காக்க அவரும் சிவனைப் போல ஆலகால விஷம் உண்டு நீலம் கொண்டார். நான் வெள்ளை நிற விஷ்ணு பிரானையும் நீலநிற விஷ்ணுவையும் 10 தடவை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் சிவ பூஜைக்காக அவர் மாயூரம் வருவார். இறையருள் பெற்றுச் செல்வார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததைக்  கண்ணாரக் கண்டிருக்கிறேன். உலகம் தோன்றிய காலத்தில் பூமி ,சூரியன், சந்திரன் தோற்றத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இரண்யாட்சன் பூமியை எடுத்துச் செல்ல முயன்றதையும்  பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டதையும் நேரில் கண்டு வியந்திருக்கிறேன்.” “காகபுஜண்டரே…! தாங்கள் சொல்லச் சொல்ல வியந்து சிலிர்க்கிறேன்… எவ்வுலகமும் வியக்கூடிய ஞான அனுபவம் பெற்றவர் நீங்கள்….” வசிஷ்டர் வாயால் வாழ்த்துக்கள் நிறைந்தன.

“இன்னும் கேளுங்கள் மகரிஷி…. சிவபெருமான் இதுவரை 30 தடவை முப்புரங்களை எரித்துள்ளார். தட்சனது யாகத்தை 2 முறை அழித்துள்ளார். மகாவிஷ்ணு பரசுராமராக ஆறு முறை அவதாரம் எடுத்துள்ளார். ராம அவதாரம் 10 முறை. கிருஷ்ண அவதாரம் 15 முறை. இவையெல்லாம் பார்த்தது  எனது பாக்கியம். “உடனே உங்களைத் தரிசிப்பது எனது பாக்கியம்… ” வசிஷ்டர் வணங்கிச் சொன்னார். “உங்களுக்கு இது எட்டாவது பிறவி தெரியுமா ?” காகபுஜண்டர் கணக்குச் சொன்னார்.

இதைக் கேட்டு வசிஷ்டர் அதிர்ந்து போனார். அடேங்கப்பா….எட்டாவது பிறவியா? ஆம் என்பது போன்று காகபுஜண்டர் புன்னகையித்தார். தேவர்களும் தெய்வங்களும் சித்தர்களும் வியக்கும் கணக்கில்லா ஆயுள் கொண்டவர் காகபுஜண்டர். இன்றும், சீர்காழி அருகில் திருமணஞ்சேரியிலும், காரைக்கால் அருகில் திருமலைராயன் பட்டினத்திலும், திருப்பதி அருகில் காளஹத்தியிலும், கள்ளக்குறிச்சி அருகில் தென் பொன்பரப்பிலும், திருச்சி அருகில் உறையூரிலும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.