குருவை மிஞ்சிய சிஷ்யன்: புலிப்பாணி சித்தர்!

927

குருவை மிஞ்சிய சிஷ்யன்: புலிப்பாணி சித்தர்!

குருவுக்கே தனது தவ வலிமைகளை அளித்ததன் மூலமாக குருவை மிஞ்சிய சிஷயன் என்று போற்றப்பட்டவர் புலிப்பாணி சித்தர்.

சித்தர்களின் நோக்கம் என்ன? சித்தர்கள் என்பவர்கள் யார்? மனிதர்களாக பிறந்த ஒவ்வொராலும் சித்தர்களாக முடியுமா? என்று பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். சித்தத்தை அடக்கி ஆண்டவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலகை, பிரபஞ்சத்தை, உலக ரகசித்தை, உயிரின் தத்துவத்தை என்று பலவற்றையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் புலியாக விளங்கியவர் புலிப்பாணி சித்தர். மருத்துவத்தில் வல்லவராகவும் திகழ்ந்தார். முருகனின் பூஜை முறையை நன்கு அறிந்தவர். இவ்வளவு ஏன், குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்குகிறார். எள்ளு என்றால் எண்ணையாக இருக்கும் இவர்,குருவின் அருளால் அனைத்து வித்தைகளையும் கற்று தேர்ந்தார். மேலும், குருவிற்கு தேவையான அனைத்து மூலிகைகளையும் சேகரித்து கொண்டு வருவது, அவருக்கு பணிவிடை செய்வது செய்வது என்று இருந்தார்.

புலிப்பாணி சித்தர் போகரின் சீடர். உண்மையில் புலிப்பாணி என்பது அவரது பெயரல்ல. இதற்கு ஒரு காரண கதையுண்டு. ஒரு நாள் குருவான போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு, புலிப்பாணியோ, சரி நம்ம குரு தண்ணீர் கேட்கிறாரே என்று எண்ணி அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வர புலியை வசியபடுத்தி அதன் மீது ஏறிச் சென்றார். அப்போது, வெறும் கையிலேயே போதுமான தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

புலி மீது ஏறி சென்று தண்ணீர் (பாணி) கொண்டு வந்து கொடுத்ததால் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணயாக இருந்தார்.

பழனிமலை முருகன் சிலையை செய்து முடித்ததும், போகர் சீனா சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை போகர் இழந்துவிட்டார். அதன் பின், புலிப்பாணி சித்தரே, போகரை தனது முதுகில் தூக்கி வந்து பழனி முருகன் கோயிலில் வைத்து போகருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்துள்ளார். மேலும், மருத்துவத்திலும், ஜாலங்கள் செய்வதிலும் குருவான போகரை மிஞ்சியவர் என்று சொல்லப்பட்டதால், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

போகர், முருகன் சிலையை செய்யும் போது 9 வகையான விஷ மூலிகைகளைக் கொண்டு சிலை செய்கிறாரே, இவை மனிதர்களை எப்படி குணப்படுத்தும்? மாறாக அவர்களது உயிரையல்லவா எடுத்துவிடும் என்று கருதிய புலிப்பாணி தனது குருநாதரிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த போகர், இந்த 9 மூலிகைகளை ஒரு குறிப்பிட்ட விகிதப்படி கலந்தால் நவபாஷாணம் என்ற மருந்து கிடைக்கும்.

ஆனால், இந்த மருந்தை நேரடியாக சாப்பிடக் கூடாது. அப்படி நேரடியாக சாப்பிட்டால் மரணம் நேரிடும். நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருந்தாக மாறிவிடும். அதோடு மட்டுமல்லாமல் நவபாஷாணத்தின் வாசம் பட்டால் மனிதர்கள் புத்துணர்வு பெறுவார்கள். இந்த முருகன் சிலையானது கலியுகம் முடியும் வரையில் அப்படியே அங்கேயே இருக்கும். முருகனின் அருளால் மக்களுக்கு எந்த துன்பங்கள், கஷ்டங்கள் வராது என்றார்.

போகர் இறந்த பிறகு, அவரது சமாதிக்கு புலிப்பாணி சித்தர் பூஜை செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. புலிப்பாணி சித்தரை நினைத்து மனதார தொழுதால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக வரலாற்று கதை கூறுகிறது. குருநாதரைப் போன்று மூலிகை வைத்தியத்தில் வித்தகரான புலிப்பாணி பலருக்கும் தனது மூலிகை வைத்தியத்தால் நோயிலிருந்து மீண்டு அவர்களை காப்பாற்றியுள்ளார்.

ஒரு சமயத்தில், தனது குருநாதர் போகர் சமாதியான பழனிமலையிலேயே புலிப்பாணி சித்தரும் சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.