குழந்தை வரம் அருளும் குரு சித்தானந்த சுவாமிகள்!

83

குழந்தை வரம் அருளும் குரு சித்தானந்த சுவாமிகள்!

சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்பது பொருள். இமயம், நியமம், ஆசனம், தியானம், சமாதி, பிரத்தியாகாரம், பிரணாயாமம் ஆகிய 8 வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ்சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். திருமூலர், போதகுரு, சட்டை முனி சித்தர், குதம்பைச் சித்தர், கோரக்கர், போதகுரு, மச்சமுனி சித்தர், பதஞ்சலி, நந்தி தேவர், கொங்கணர், பாம்பாட்டி சித்தர் என்று 18 தலையாய சித்தர்கள் இருந்தனர்.

இவர்கள், தவிர ஒவ்வொரு ஊர்களிலும் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். புதுச்சேரி சித்தர்கள் என்றதும் முதலில் நமது நினைவிற்கு வருவது சித்தானந்த சுவாமிகள். கடலூர் அருகிலுள்ள வண்டிப்பாளையம் என்ற ஊரில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்தவர். சிறு வயதில் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரரை வழிபட தொடங்கினார்.

சித்தானந்த சுவாமிகள், பெரியநாயகி அம்மனுக்கு பூக்கள் பறித்து மாலை சூட்டி ஆலய திருப்பணிகளைச் செய்து வந்தார். அப்போது ஒரு நாள் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பாடலீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும் பெரு வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கோயிலுக்கு செல்ல வழி தெரியாத நிலையில், அங்கு வந்த சித்தானந்தன், வெள்ளத்தில் குதித்து கோயிலுக்கு நீந்திச் சென்று இறைவனுக்கு பூஜை செய்து வழிபட்டான்.

என்னதான் பெருவெள்ளம் சூழ்ந்திருதாலும், சித்தானந்தன் தெய்வ நாமத்தை உச்சரித்தபடியே சுவாமிக்கு பூஜை செய்தான். நள்ளிரவு நேரத்தின் போது சிவபெருமான் மற்றும் பெரியநாயகி அம்மனின் அருள்பார்வை சித்தானந்தன் மீது படத்தொடங்கியது. மேலும், சித்தானந்தனுக்கு சிவபெருமான், மற்றும் பெரியநாயகி அம்மாள் ஆகியோர் காட்சியளித்து அருள் புரிந்து மறைந்தனர். அன்று முதல் சித்தானந்தன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையாக நடந்தது. அதோடு, அவரை தரிசனம் செய்தவர்களின் பிரச்சனைகள் தீர்ந்தன.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்த சுவாமிகள் அருள்பாலிக்கிறார். இந்த கருவடிக்குப்பத்திலுள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலுக்குள் நுழைந்ததும், விநாயகப் பெருமான் அருள் பாலிக்கிறார். அவருக்கு அடுத்து சற்று திரும்பி பார்த்தால் சித்தானந்த சுவாமிகளின் கருவறையை ஒட்டி குரு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளது.

வலதுபுறம் சித்தானந்த சுவாமிகளின் தியான திருமேனிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலின் சிறப்பு அம்சமாக கோயில் முழுவதுமாக சித்தர்களின் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சித்தர்களை தரிசனம் செய்த பிறகு வெளியில் வந்தால் வளாகத்திலுள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருமணமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சித்தானந்த சுவாமிகளின் சன்னதிக்கு எதிராக ந ந்தி தேவர் காட்சி தருகிறார். பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இதே போன்று ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும் நடக்கிறது. மேலும் குரு சித்தானந்த சுவாமிகளின் ஜீவன் முக்தி அடைந்த வைகாசி 15 ஆம் தேதி குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.