செங்கோல் ஆதீனம் அருள் வரலாறு!

1150

செங்கோல் ஆதீனம் அருள் வரலாறு!

காசி கேதாரம் குமரி காவிரி கதியெனும் சேது தாம்பூரணை மாசறு தீர்த்தத்துள்ளதோர் பலனும் மற்றும்

எத்தலங்கள் சேர்பலனும் பூசனை லிங்கத்தர்ச்சனை முதலாம் புண்ணியம் யாவையும் கொடுக்கும் தேசிகன் கல்லூர்

சத்திய மெய்ஞ்ஞானி தரிசனை காணுவார் தமக்கே.

ஆதீனம் பெயர்க்காரணம்:

பாண்டிய மன்னர்களுக்குச் செங்கோல் வழங்கும் உரிமையை உடையதால் இவ்வாதீனம் “செங்கோல்’ ஆதீனம் எனப் பெயர் பெற்றது.

அமைவிடம்:

பெருங்குளம் என்ற ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்கே ஏறத்தாழ 10 கி.மீட்டரில் உள்ள வைணவத்தலம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பாண்டிய நாட்டுப் பதிகள் 18-இல் ஒன்று. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது.

வைணவ உலகில் இதன் பெயர் திருக்குளந்தை. திருக்குளந்தை என்றால் யாருக்கும் தெரியாது. பெருங்குளம் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இரண்டாவது நிலைப் பேரூராட்சியாக (நகரப் பஞ்சாயத்தாக) இப்போது உள்ளது. உக்கிரவழுதீஸ்வரர் கோயில் என்றொரு சிவன் கோயிலும் உள்ளது. பாடல் பெற்ற வைணத் தலமான பெருங்குளத்தில் பழைமையான ஒரு சைவ மடம் இருப்பது பெருங்குளத்திற்குரிய மற்றொரு சிறப்பு.

செங்கோலாதீனத்தின் தொடக்க கால வரலாறு இருவேறு வகையாகக் கூறப்படுகிறது.

ஆதின வரலாறு:

கயிலாயவாசியும் அகச்சந்தானக் குரவருள் ஒருவருமாகிய சத்தியஞான தரிசினிகளிடமிருந்து வரலாறு தொடங்குகிறது. சத்தியஞான தரிசினிகள் கயிலை மலையிலிருந்து புறப்பட்டு அகத்திய முனிவரைக் காணப் பொதியமலைக்கு வருகிறார். வரும் வழியில் தில்லை சிதம்பரத்தில் நடராஜப் பெருமானைத் தரிசிக்கிறார்.

தரிசிக்கும்போது அவரது கூப்பிய கரங்களுக்குள் திருவருட் செயலால் ஒரு சிவலிங்கம் எழுந்தருளி விடுகிறது. முறைப்படி அதனைப் பிரதிட்டை செய்து வழிபடுமாறு ஓர் அசரீரி வாக்கும் எழுகிறது. சத்தியஞான தரிசினிகள் தில்லையிலேயே ஒரு திருமடம் நிறுவி, திருவருளால் கிடைத்த சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு வருகிறார். அவருக்குப் பின் வழி வழியாகப் பதினேழு மடாதிபதிகள் வருகின்றனர்.

பதினெட்டாவது பட்டம் மடாதிபதியாகத் திகம்பர சித்தர் என்பவர் திகழ்கிறார். அவர் காலத்தில், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் நடராஜர் தரிசனத்திற்காகச் சிதம்பரத்திற்கு வருகிறான். சிதம்பரத்தில் சித்தரையும் தரிசிக்கிறான். தன்னுடன் பாண்டிய நாட்டுக்கு வந்து தங்கி அருள்புரியுமாறு வேண்டுகிறான், சித்தரும் உடன்பட்டு மன்னனுடன் பாண்டி நாட்டுக்கு வருகிறார்.

கல்லூர் என்னும் சிற்றூரில் பாண்டிய மன்னன் அமைத்துத் தந்த திருமடத்தில் தங்கி தெய்வப் பணியும் சைவப் பணியும் ஆற்றிய வண்ணம் தம்மை வந்தடைந்த அன்பர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

சில காலத்திற்குப் பின் சோழ மன்னன் ஒருவன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து தலைநகர் கொற்கையைக் கைப்பற்றிக் கொண்டான். தோல்வியடைந்த பாண்டிய மன்னன் திகம்பர சித்தரிடம் வந்து சரண் புகுந்தான். படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளப் போதுமான பொருளில்லாத காரணத்தால் தோல்வியடைய நேர்ந்ததென்று கூறி வருந்தினான். கல்லூர்ச் சித்தர் செங்கற்களைத் தங்கக் கட்டிகளாக்கி அவனிடம் கொடுத்து “இவற்றைக் கொண்டு உன் படை பலத்தைப் பெருக்கி சோழனோடு போரிட்டு வென்று வருவாயாக” என்று வாழ்த்தி அனுப்பினார்கள்.

சிலநாளில் பாண்டிய மன்னன் சோழனோடு போர் தொடுத்து வென்றான். வெற்றி பெற்ற மன்னன் பெருங்குளத்தில் சித்தருக்கு ஆதீனம் அமைத்துக் கொடுத்தான். சித்தர் பெருங்குளத்திற்கு வந்து சேர்ந்தார். சித்தரின் ஆசியோடு மீண்டும் ஆட்சியைத் தொடங்கிய பாண்டிய மன்னன், சித்தர் பெருமானின் திருக்கரங்களால் செங்கோலைப் பெற்றுக் கொண்டான்.

அக்காலத்திலிருந்து கொற்கைப் பாண்டியர்கள் முடிசூடும் போது பெருங்குளம் மடாதிபதிகளிடமிருந்து செங்கோலைப் பெற்றுக் கொள்ளும் வழக்கம் உண்டாயிற்று. ஆதீனத்திற்கும் செங்கோல் ஆதீனம் செங்கோல் மடம் என்ற பெயர் உண்டாயிற்று. மதுரைப் பாண்டியர்கள் மீனாட்சி அம்மையிடம் செங்கோல் பெறும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், திருமலை நாயக்கர் அவருக்குப் பின் வந்த நாயக்க மன்னர்கள் வரை அவ்வழக்கம் தொடர்ந்தது.

மதுரைக் கோயில் விழாவின் ஓர் அங்கமாக இன்றும் செங்கோல் வழங்குதல் நிகழ்கிறது. கொற்கை பாண்டியர்கள் பெருங்குளம் செங்கோல் மடத்தில் செங்கோல் பெறுவதை வழக்கமாகக் கொண்டார்கள், வேறு எந்த மடத்திற்கும் அமையாத தனிச்சிறப்பு இது. 18-ஆம் பட்டம் சித்தர் சுவாமிகளால் ஏற்பட்ட சிறப்பு.

இந்த 18-ஆவது பட்டம் திகம்பரசித்தர் சுவாமிகளின் சிலாவிக்ரகம் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் சிவாலயத்தில் அருள்மிகு கோமதியம்மாள் மூலஸ்தானத்திற்கு முன் அமைந்துள்ள அர்த்த மண்டபத்தில் இப்பொழுதும் நாம் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது.