தொப்புள் வழியாக சிவனை வழிபட்ட 3 கால் சித்தர்!

939

தொப்புள் வழியாக சிவனை வழிபட்ட 3 கால் சித்தர்!

உலகிலேயே மூன்று கால்கள் கொண்ட முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த சித்தர் பிருங்கி ரிஷி முனிவர். சிவபெருமான் மீது தீவிர பற்று கொண்டவர். மேலும், சிவனைத் தவிர வேறு தெய்வத்தை வழிபடக் கூடாது. சிவன் தான் எல்லாமே என்பதில் தீவிர கொள்கை கொண்டிருந்தார். நாள் தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்து பராசக்தி தேவியை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதன் காரணமாக சிவனிடம் சக்தி முறையிட்டாள்.

அதன் பிறகு அம்மையும், அப்பனும் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அப்போது, பூஜைக்கு வந்த பிருங்கி ரிஷி முனிவர், அம்மையும் அப்பனும் ஒரு உருவமாய் நின்றதைக் கண்டு சிவனை எப்படி வழிபடுவது என்று யோசித்தார். சிறிது நேரத்திலேயே வண்டு உருவமாக மாறி 3 கால் சித்தர், அம்மையப்பரின் தொப்புள் வழியாக துளையிட்டு சிவனை மட்டுமே வலம் வந்து தனது அன்றைய தினத்தில் சிவனை வழிபட்டார்.

இதைக்கண்டு சினம் கொண்ட அம்மை பிருங்கி ரிஷி முனிவரின் உடல் பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கி எடுத்தாள். சக்தி இழந்த பிருங்கி ரிஷி முனிவர் தடுமாறினார். தனது பக்தர் சக்தியிழந்து தவிப்பதை தடுக்க சிவபெருமான் வலிமையுள்ள 3ஆவது கால் ஒன்றை பிருங்கி ரிஷி முனிவருக்கு கொடுத்து அருளினார். மேலும், சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை பிருங்கி ரிஷி முனிவரே உணர்ந்திருப்பாய். ஆதலால், சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அருள் புரிந்தார்.

தனது தவறை உணர்ந்த பிருங்கி ரிஷி முனிவர், அறியாமல் செய்த தவறுகளை மன்னித்தருள வேண்டும் என்று பராசக்தியிடம் மன்னிப்பு வேண்டினார். இதற்கு பராசக்தி தேவியோ உம்மை மன்னித்து அருளினோம் முனிவரே என்று கூறினார். அதன் பிறகு இருவரையும் தரிசிப்பதையே தனது வேலையாக மூன்று கால் சித்தர் செய்து வந்தார்.

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்க சன்னிதிக்கு இடது பக்கம் உள்ள வெளிப்புற பிரகாரத்தின் தூணில் பிருங்கி ரிஷி முனிவரின் சிற்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.