நவநாத சித்தர்கள் – பாகம் 5!

202

நவநாத சித்தர்கள் – பாகம் 5!

சித்தர்கள் பட்டியல் விசித்திரமானது. நவநாத சித்தர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். முதன் முதலாக சித்தர்கள் என்று பட்டியலிட்டவர்கள், சத்யநாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுனி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கஜேந்திர நாதர் மற்றும் கோரக்க நாதர் ஆகிய 9 சித்தர்கள் அடங்கிய பட்டியலைத் தான் வெளியிட்டார்கள். சித்தர்களை வடக்கில் வரிசைப்படுத்தியவர்கள், நவநாத சித்தர்கள். இதே போன்று தெற்கில் சித்தர்களை வரிசைப்படுத்தியவர்கள் பதினெண் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அபிதான சிந்தாமணி வேறொரு பட்டியலைப் வேறு பெயர்களுடன் தருகிறது. சத்துவ நாதர், சாலோக நாதர், ஆதி நாதர், அருளி நாதர், கடயிந்திர நாதர், கோரக்க நாதர், குக்குட நாதர். இதே போன்று இருக்கும் இன்னொரு பட்டியலில் அந்தளேந்திரர், கோரக்கர், கொங்கணர், நாகார்சுநர், மச்சேந்திரர், பீமநாதர், அருணகிரி நாதர், புஜங்க குருநாதர், ஆதிநாதர் என்று வேறு சிலர்.

கணநாதர் என்பவரும் நாக நாதர் என்று ஒரு குறிப்பு குறிப்பிடுகிறது. சித்தர்கள் என்று எத்தனை பேர் இருந்தால் என்ன அவர்கள் வாழ்வும் வரலாறும் அவர்கள் கற்றுத் தந்த சித்துக்களும் அருளிச் சென்ற நூல்களும் சித்தர்களின் சிறப்பைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.

நவநாத சித்தர்கள் அம்மனை வழிபடுபவர்கள். நவநாத சித்தர்களில் முதல் சித்தர் சத்ய நாதர். ‘ஞானச் சித்தர்’ என்று அவரது திருநாமம் போற்றப்படும். ஞானப் பாடல்கள் 35 மெய் ஞானம் 12 என சத்ய நாதரின் 47 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. ‘மனோன்மணி’ என்று அம்பிகையை முன்னிறுத்தியே சத்ய நாதர் பாடியிருக்கிறார் சத்ய நாதர்.

நவநாத சித்தர்களில் 7ஆவது சித்தர் பிரான் மச்சேந்திர நாதர். சிவபிரான் தாரக மந்திரத்தை உமாதேவிக்கு உபதேசித்துக் கொண்டிருந்ததைக் கேட்ட – கருவிலிருந்த மீன் குஞ்சே மனித உருவெடுத்துப் பிறந்ததாகப் புராணம் சொல்கிறது. அந்த மீன் குஞ்சே ஆதி சிவனால், ‘மச்சேந்திரா..’ என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்டவரே மச்சேந்திர நாதர்.

சிறுவனாக இருந்த கோரக்கரை சித்தராக்கியவர் மச்சேந்திர நாதர். மலையாள நாட்டில் தங்கி அந்நாட்டு இளவரசியை மணந்தார். அரச வாழ்க்கை வாழ்ந்தவர். சீடர் கோரக்கரே அவரைக் மலையாள தேசத்திலிருந்தும்  கேரளத்து இளவரசியிடமிருந்தும் மீட்டெடுத்து வந்தார். குருவை மிஞ்சிய சீடராய் கோரக்கரே மச்சேந்திர நாதரின் மாயையைப் போக்கியது ஒரு தனி வரலாறு. மச்சேந்திர நாதரின் பாடல்களில் நொண்டிச் சிந்து மிளிர்ந்திருக்கும். அதனால் ‘நொண்டிச் சித்தர்’ என்ற பெயரும் மச்சேந்திரருக்குப்  பெருமை சேர்க்கும்.