பதஞ்சலி சித்தர் வாழ்க்கை வரலாறு!

889

பதஞ்சலி சித்தர் வாழ்க்கை வரலாறு!

பிரம்ம தேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர் பதஞ்சலி சித்தர். இவர், பங்குனி மாதம் மூலம் நட்சத்திர நாளில் அத்திரி மகரிஷி – அனுசுயாதேவிக்கு மகனாக பிறந்துள்ளார். ஆதிசேஷனின் அவதாரமாக தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. ஆதலால், பதஞ்சலி சித்தரின் மூச்சுக்காற்று பட்டால் அனைத்துமே சாம்பலாகிவிடும். எனவே தான், தனது சீடர்களுக்கு அசரீரியாக (ஒலியாக) உபதேசம் செய்தார்.

தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்ற நூலை தனது சீடர்களுக்கு கற்றுத் தர எண்ணினார். அதன்படி, தனக்கும், சீடர்களுக்கும் இடையில், ஒரு திரையை போட்டுக் கொண்டு திரைக்கு பின்னால் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசம் செய்தார். அப்போது, பதஞ்சலி சித்தர் ஏவிய பணிக்காக கௌடபாதர் என்ற சீடர் மட்டும் வெளியில் சென்றுவிடுவார்.

இத்தனை நாட்கள் அசரீரியாக ஒலித்த பதஞ்சலி சித்தரின் குரலைக் கேட்ட சீடர்கள் மகிழ்ந்தனர். அதோடு இல்லாமல், குருநாதரின் திரு முகத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அதன் காரணமாக திரையை நீக்கி பதஞ்சலி சித்தரை காண, அடுத்த கனமே அவரது கடும் விஷக்காற்று தீண்டி சீடர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாயினர்.

அப்போது வந்த கௌடபாதர், தனது நண்பர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாக இருப்பதைக் கண்டு கதறி அழுதார். கௌடபாதரைக் கண்ட பதஞ்சலி முனிவரோ மானுட உருவத்திற்கு மாறினார். சீடர்கள் அனைவரும் பொறுமையை இழந்ததினால் வந்த வினை, கௌடபாதர் நீ மட்டும் தான் எனது சீடராக இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆதலால், உனக்கு சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் என்று அனைத்து வித்தைகளையும் பதஞ்சலி முனிவர் கற்றுக் கொடுத்தார்.

இறுதியாக ஆதிசேஷ அவதாரத்தில் ஆனந்த தரிசனம் கண்ட பதஞ்சலி சித்தர் சிதம்பரத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி…

பதஞ்சலி முனிவர் தியானச் செய்யுள்:

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே

சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே

பக்தியுடன் வணங்கும் எமக்கு

நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே!

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்:

ஒரு சிறிய பலகையை எடுத்துக் கொண்டு அதில், மஞ்சள் தடவி அரிசி மாவு கொண்டு கோலமிட்டு, அந்தப் பலகையில் பதஞ்சலி சித்தரின் புகைப்படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு முன்பாக திருவிளக்கை வைத்து நல்லெண்ணை ஊற்றி இரண்டு முக தீபம் ஏற்ற வேண்டும். மேலும், வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்கள், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ ஆகிய மலர்களைக் கொண்டு பூஜை செய்து இந்த 16 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும்…

பதஞ்சலி சித்தரின் பதினாறு போற்றிகள்:

  1. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
  2. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
  3. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
  4. கருணாமூர்த்தியே போற்றி!
  5. பூலோகச் சூரியனே போற்றி!
  6. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
  7. இன்மொழி பேசுபவரே போற்றி!
  8. ஒளிமயமானவரே போற்றி!
  9. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
  10. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
  11. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
  12. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
  13. பேரும் புகழும் உடையவரே போற்றி!
  14. இகபரசுகம் தருபவரே போற்றி!
  15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
  16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே சித்தரே போற்றி போற்றி!

இப்படி பதஞ்சலி சித்தரின் 16 போற்றிகளை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்,

ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி

என்று 108 முறை பக்தியுடன் அவரது மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.

பதஞ்சலி சித்தரின் பூஜையின் பலன்கள்:

  1. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
  2. செல்வம் பெருகும், மகிழ்ச்சி உண்டாகும்.
  3. எலும்பு தொடர்பான நோய்கள் குணமடையும்.
  4. குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  5. வியாழ கிரக தோஷம் நீங்கும்.
  6. உஷ்ணம் தொடர்பான நோய்கள் தீரும்.
  7. கல்வி கலையில் சிறந்து விளங்குவார்கள்.
  8. வாழ்வில் வெற்றி உண்டாகும். எல்லா தடைகளும் நீங்கும்.
  9. எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வீர்கள்…