பெண்ணின் சேலை தன் மீது விழுந்ததால் கையை வெட்டிக் கொண்ட கோரக்கர்!

894

பெண்ணின் சேலை தன் மீது விழுந்ததால் கையை வெட்டிக் கொண்ட கோரக்கர்!

தஞ்சாவூர் மாவட்டம் கீழக் கொருக்கை என்ற பகுதியில் பிரம்மஞான புரீஸ்வரர் உள்ளது. இந்தக் கோயில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாயார் புஷ்பவல்லி பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், மனைவியுடன் அதிகார நந்தி, இரட்டை பைரவர், தட்சிணாமூர்த்தி, சூரியன், துர்க்கை, பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலும், தாராசுரம் கோயிலும் உள்ளன.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்: மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருப்பார்கள். அதோடு, செல்வ வளமும் பெற்றிருப்பர். கம்பீர்மான தோற்றம், மனோதிடம் கொண்டிருப்பார்கள். கோபம் இவர்களின் இயல்பான குணம், எனினும், தேவைப்படும் பொழுது நிதானத்தையும் கடைபிடிப்பீர்கள். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பீர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க பிரம்மஞான புரீஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். மேலும், கல்வியில் சிறக்கவும், திருமண தடை நீங்கவும், மூளை வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றிற்கு இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தல பெருமை:

அவிட்டம் நட்சத்திர தலம்: பிரம்ம தேவனுக்கு அவிட்டம் நட்சத்திர நாளில் தான் ஞானம் கிடைத்துள்ளது. ஆதலால், இந்த தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ அல்லது தங்களது நட்சத்திர நாளிலோ அல்லது ஆவணி அவிட்டம் நாளன்றோ இந்த கோயிலுக்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்தினால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.

இதே போன்று வாழ்வின் தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலானது திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் உள்ளது. இந்த கோயில் குறித்து ஸ்வஸ்திக் டிவி இணையதளத்தில் இதற்கு முன்னதாக பல பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்கவும், தோஷங்கள் நிவர்த்தியாக இந்த கோயிலில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

தல வரலாறு:

கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது மேற்கொண்ட போது இந்த கோயிலுக்கு வந்து ஒரு மடத்தில் தங்கினார். அங்கு ஏற்கனவே பல சித்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கிய கோரக்க சித்தர் நள்ளிரவில் கண் விழித்துப் பார்த்தார். அப்போது தனது அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும், அவளது சேலை முந்தானையானது தன் மீது கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இதற்கு பரிகாரம் செய்வதற்கு தனது இரு கைகளையும் வெட்டினார்.

அதன் பின்னரும், அந்த மடத்திலேயே சில காலம் தங்கியிருந்தார். மேலும், அந்தக் கோயிலில் உள்ள சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் புனித நீராடி, வெட்டுபட்ட கைகளால் தாளமிட்டு ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு கை கிடைக்கும்படி அருள் புரிந்தார். கோரக்கரின் கை வெட்டுபட்ட தலம் என்பதால், இந்த ஊரானது கோரக்கை என்றும், தனது குறுகிய கைகள் கொண்டு சிவபெருமானுக்கு பூஜித்து வந்ததால் குறுக்கை என்றும் பெயர் பெற்றது. தற்போது இந்த ஊரானது கொருக்கை என்று மாறிவிட்டது.

இறைவன் பெயர்க்காரணம்:

பிரம்ம தேவன் வைத்திருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தனர். இதனை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். எனினும், படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்ம தேவனால் முன்பு போன்று படைப்புத் தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, விஷ்ணுவின் ஆலோசனைப்படி கொருக்கை பகுதிக்கு வந்து சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் புனித நீராடியதோடு அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில் சிவபெருமான், பிரம்மதேவனுக்கு ஞானம் கொடுத்தார். இதையடுத்து பிரம்மன் மீண்டும் தனது படைப்புத் தொழிலை சரியாக செய்தார். இதன் காரணமாக இந்தக் கோயில் இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று இந்தக் கோயிலில் திருவிழா போன்று கொண்டாடப்படுகிறது. முந்திரிப்பருப்பு மற்றும் நிலக்கடலை ஆகிய இரண்டையும் கலந்து மாலை கட்டி சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்திக்கு சாற்று பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் எளிதில் நடந்து முடியும் என்பது ஐதீகம்.