பேரும், புகழும் தேடி வர அகத்திய முனிவர் வழிபாடு!

435

பேரும், புகழும் தேடி வர அகத்திய முனிவர் வழிபாடு!

தமிழ் மீது பற்று கொண்ட அகத்திய முனிவரை வழிபாடு செய்வதன் மூலம் பேரும், புகழும் தேடி வரும் என்பது ஐதீகம்.

சித்தர்களில் முக்கியமானவர் அகத்தியர். சப்தரிஷிகளிலும் ஒருவராக திகழ்கிறார். மார்கழி மாதம், ஆயிலயம் நட்சத்திரத்தில் பிறந்தவர். தமிழ் மீது பற்று கொண்ட இவர், சிவபெருமானிடமிருந்து தமிழ் கற்று தேர்ந்தார். விதர்ப நாட்டு மன்னனின் மகளான லோபாமுத்திரையை மணமுடித்தார். இவருக்கு இத்மலாகன் என்ற மகன் உள்ளார்.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருமணத்தை காண்பதற்கு அனைவரும் வட திசை நோக்கி புறப்பட்டனர். அப்போது தென் திசையானது மேல் நோக்கி நின்றது. இதனை சரி செய்ய அகத்திய முனிவர் தென் திசை நோக்கி புறப்பட்டார்.

அப்போது அவர் கொண்டு வந்த நீரை காகம் வந்து தட்டிவிட அது காவிரி ஆறாக மாறியது என்று புராணக் கதைகள் உண்டு. முதல் தமிழ் இலக்கியமான அகத்தியம் என்ற நூலை அகத்திய முனிவர் எழுதியுள்ளார். சரி அகத்திய முனிவரை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா? என்று கேட்டால் ம்ம்ம் பண்ணலாமே என்று தான் சொல்ல வேண்டும்.

அகத்தியரை வழிபடும் முறை:

ஒரு பலகையை எடுத்துக் கொண்டு அதில் மஞ்சள் பூசி, அகத்திய முனிவரின் உருவ படத்தை வைத்து பூ போட்டு, செம்பு அல்லது பித்தளை அல்லது வெள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றிலான சொம்பு நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வசதியாக பஞ்சாமிர்தம் அல்லது பொங்கல் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். மேலும், தீபம் ஏற்றி அகத்தியரை மனமுருக வழிபாடு செய்யலாம். அதோடு, அகத்திய முனிவர் எழுதிய தியான செய்யுளை மனமுருக சொல்ல வேண்டும்.

அகத்திய முனிவர் தியான செய்யுள்:

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே

சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே

கடலுண்ட காருண்யரே

கும்பமுனி குருவே சரணம் சரணம்!

அகத்திய முனிவரை வழிபாடு செய்வதன் பலன்கள்:

  1. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இசை மற்றும் கவிதை ஆகியவற்றில் மேன்மை உண்டாகும்.
  2. பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.
  3. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
  4. பேரும், புகழும் தேடி வரும்.
  5. அனைத்து விதமான நோய்களும் தீரும்.
  6. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

அகத்திய முனிவர் ஜீவ சமாதி:

4 யுகமும், 48 நாட்களும் இவர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, அகத்திய முனிவர் ஜீவ சமாதி அடைந்தது திருவனந்தபுரம் என்றும் கும்பகோணம் என்றும் இருவேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.