மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்டவர் யார்?

153

மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்டவர் யார்?

பிருகு மகரிஷி சப்த ரிஷிகளில் ஒருவர். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன. கடும் தவங்கள் பல இயற்றி தெய்வ அருளையும் பெற்றவர். எந்த அளவுக்கு அவர் தவ வலிமை பெற்றிருந்தாரோ அந்த  அளவுக்கு அவரிடம் முன் கோபமும் குடி கொண்டிருந்தது. அவருக்கு கோபம் வந்து விட்டால் சாமானிய மனிதனாக இருந்தாலும் இறைவனாகவே இருந்தாலும் எடுத்தெறிந்து பேசி தகாத முறையில் அவர்களிடம் நடந்து கொள்வார்.

ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார். பிருகு மகரிஷி பிரம்மதேவனைக் காண்பதற்காக பிரம்மலோகம் சென்றார். பிரம்மதேவர் உடனே வந்து பிருகு முனிவரைச் சந்திக்காமல் சற்றுக் கால தாமதம் செய்யவே பிருகு முனிவருக்கு கடும் கோபம் வந்து விட்டது.

அடுத்து பிருகு மகரிஷி கயிலாய மலைக்கு சிவபெருமானை தரிசிக்கும் நோக்கத்துடன் சென்றார். அப்போது சிவபெருமான் கண்களை மூடியவாறு யோக நிஷ்டையில் இருந்தார்.  ஆகவே, அவர் பிருகு மகரிஷியை பார்க்கவில்லை. கடுங் கோபங்கொண்ட பிருகு மகரிஷி `உலகத்தையும் மக்களையும் மறந்து எந்தக் கணமும் உமது மனைவியை அருகிலே அமர்ந்துக் கொண்டு மோக வெறி பிடித்த உம்மை நான் தரிசிக்க வந்ததே பாபம்’ எனக் கூறிவிட்டு கயிலையத்தை விட்டுப் புறப்பட்டார்.

அடுத்து மகாவிஷ்ணுவின் பொறுமையைச் சோதிப்பதற்காக வைகுண்டம் வந்தார். சயனக்கோலத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த விஷ்ணு, முனிவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவரைக் கண்டு கொள்ளாதது போல் நடித்தார். பிருகுவுக்கு கோபம் வந்து விட்டது. ஒரு முனிவன் உன்னைத் தேடி வந்தும் என்னை நீ அவமதித்தாய், என்று காலால் விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். துயில் கலைந்து எழுவது போல் நடித்த பெருமாள், உதைத்த பாதம் நொந்ததோ என்று கைகளால் தாங்கிப் பிடித்தார்.

மும்மூர்த்திகளில் பொறுமை மிக்கவர் விஷ்ணுவே என்பதை பிருகு அறிந்து கொண்டார். பரம்பொருளையே எட்டி உதைத்த தோஷத்தால், பிருகுவின் காலில் இருந்த ஞானக்கண் மறைந்தது. தனது `கணவர் ஒரு சாமானிய பூலோகவாசியால் அவமானப்பட்டதை லட்சுமி தேவியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கணவர் மீது கடுங்கோபம் கொண்ட மகாலட்சுமி, `இனி இங்கு எனக்கு இடமில்லை. யாருமே காண முடியாதபடி என்னை மறைத்துக் கொண்டு வாழ்வேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டாள்.

லட்சுமி தேவி இல்லாத மகாவிஷ்ணுவை பிருகு மகரிஷியால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அவரை விட்டு லட்சுமி தேவி அகன்றுவிட்டால் மூவுலகமும் வளம் குறைந்து நிலை குலைந்து தடுமாற்றம் அடைந்து விடுமே என்று அஞ்சி, ஓடிச் சென்று லட்சுமி தேவியின் பாதம் பணிந்து அவளைத் தடுத்து நிறுத்தினார். தன்னுடைய முன்கோவத்தால் அறியாமையில் செய்துவிட்டதாகவும், சினம் தணிந்துவிட்டதாகவும் கூறினார்.

பிருகு மகரிஷி, மகாலட்சுமியின் பாதம் பணிந்து, “லோகமாதா ! நான் செய்த மகாபாதகத்துக்கு கடும் தண்டனையாக தாங்களே என் மகளாக வந்துதித்து என் மார்பில் எட்டி உதைத்து என்னைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு “”மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு “பார்கவி” என்ற பெயர் ஏற்பட்டது.

பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார். ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார்.

அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பல காணப்படுகின்றன.

பிருகு மகரிஷியால் நமக்கு சொல்லப்படும் சேதி என்னவென்றால்,

“முன் கோபம் நம்மை மதி இழக்க செய்துவிடும் என்பதே”

“சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை,

சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை”.