18 சித்தர்கள் – `தமிழ் வேறு, இறைவன் வேறு இல்லை’ – திருமூலர்

348

அன்பும் சிவமும் வேறு வேறு என்போர் அறிவற்றவர்கள். இரண்டும் ஒன்று என்பதை எவரும் அறிவதில்லை. இரண்டும் ஒன்றென உணர்ந்து விட்டால் சிவனுடன் இயல்பாகக் கலந்து சிவமய மாவார்கள். இவ்வாறு பேரன்பு செலுத்தும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி ‘ஜீவனும் சிவனும் ஒன்றே’ என்ற பெரும் பேறை அடைவார்கள்!
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர்!
‘திட்டமிடும் இடங்களையெல்லாம் நம்மால் பார்த்துவிட முடிவதில்லை. எதிர் பாராத இடங்களையும் அனுபவங்களையும் பார்க்க நேரிடுகிறது’ என்பதே அனுபவத்தின் பயணமொழி. குறிப்பாக ஆன்மிகப் பயணங்கள். தொடங்குவதோடு நின்று விடுகிறது திட்டங்கள். அதன் பிறகு கிடைப்பதெல்லாம் எதிர்பாராத அனுபவங்களே அதை உணர்வதே ஆன்மிகம் எனலாம்…

சித்தர் திருமூலரின் ஜீவசமாதிப் பயணமும் நமக்கு அப்படியே வாய்த்தது…
பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக உள்ளது, திருமூலர் அருளிய ‘திருமந்திரம்’. சித்தர் திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்து, மூவாயிரம் பாடல்களைப் பாடியதாக ஓர் ஐதீகம். சித்தர்களின் பாடல்களில் பல சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்டது ‘தமிழ் மூவாயிரம்’ எனப் போற்றப்படும் திருமந்திரம்!

கயிலையில் குருகுலவாசம் இருந்தவர் திருமூலர் என்று சொல்லப்படுகிறது. அங்கு திருமூலரோடு உடன்சாலை மாணாக்கராகப் பயின்றவர்கள் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி முனிவர், வியாக்ரமர் என எண்மரைக் குறிக்கின்றனர்.
வடகயிலையில் குருகுலம் பயின்று முடித்த திருமூலர், தில்லையம்பதி என சைவம் போற்றும் சிதம்பரம் வந்து சேர்கிறார். பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அவருடன் வருகின்றனர். மூவரும் அங்கு செய்த தவத்தால் ஆடல்வல்லானின் அற்புத நடனக் காட்சியைக் கண்டுகளிக்கின்றனர்.
அங்கிருந்து திருமூலர் சிவத்தல யாத்திரை மேற்கொள்கிறார். பொதிகைமலை நோக்கிப் போகும் திட்டத்துடன் பயணம் தொடர்கிறார்.. திருவாவடுதுறை செல்லும்போது மனதுக்குள் சிறு அசரீரியாய் ‘திருவருள்’ எதையோ உணர்த்த, அங்கேயே திருமந்திரத்தை அரங்கேற்றுகிறார்.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை தமிழுக்கும், சைவத்துக்கும், சித்தர் உலகுக்கும் முச்சிறப்பாய் அளித்த திருமூலர், ஜீவ ஐக்கியம் பெற்ற ஸ்தலம் சிதம்பரம். அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் ‘ஒளி ஐக்கியம்’ ஆன ஜீவ பீடம்!
திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோயில் அருகிலிருக்கும் திருநாரையூர். அங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் கோயிலில் திருமூலர் சந்நிதானம் என இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.