தியாகராஜ சுவாமிகள் – பகுதி 9

551

சமாதியும் குருபூஜை ஆராதனைகளும்.

பிறகு பக்தர்கள் சீடர்கள் ஒன்றுகூடி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அவர் உடலுக்கு மஹாபிஷேகம் முதலானவைகளைச் செய்து, பிருந்தாவன வடிவாக ஒரு ஸமாதியைக் கட்டி முடித்தார்கள். இவர் தனது சீடர்களிடம் தான் மறைந்த பிறகு 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தன் கீர்த்தி பிராபல்யமாகுமென்று கூறிவந்தாராம். அதன்படி சுவாமிகள் சமாதியடைந்து 60 ஆண்டுகள் கழித்து, அதே பராபவ ஆண்டில் ஆங்கில வருஷம் 1907இல் வாலாஜாபேட்டை ஸ்ரீரங்கதாம பாகவதர் அதிவிமரிசையாக புஷ்ய பகுளபஞ்சமி முதல் 10 நாட்கள் குருபூஜை உற்சவத்துக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த 1908ஆம் வருஷம் தில்லைஸ்தானம் ஸ்ரீ நரசிம்ஹ பாகவதர், பஞ்சு பாகவதர், பிடில் கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் திருவையாற்றில் ஆராதனைகளை அதிவிமரிசையாக நடத்திவரலானார்கள்.

அதன்பிறகு புஷ்ய பகுளபஞ்சமியை சென்னையில் தில்லைஸ்தானம் ஸ்ரீ ராமய்யங்கார் வாரிசுகள் சிறப்பாகக் கொண்டாடலாயினர். சென்னை ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்த C.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதன் வார இதழில் ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளை வாரம் ஒன்றாக வெளியிட்டு பிரபலப் படுத்தி வந்தார். மதுரை செளராஷ்டிர மக்களும், காஞ்சிபுரத்தில் நாயனாப் பிள்ளையும், திருவல்லிக்கேணி மிருதங்கம் பீதாம்பர தேசாயி அவர்களும் ஒவ்வோராண்டும் ஆராதனைகளைச் செய்து வந்தார்கள்.

மைசூர் ராஜ்யத்தில் பிறந்து பெங்களூரில் வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரின் சீடர் முனுசாமி அப்பா என்பவரிடம் இசை பயின்று சென்னையில் வாழ்ந்த ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் என்பவர் ஸத்குரு சுவாமிகளின் ஸமாதியைத் தன் சொந்த செலவில் அழகிய சிறு கோயிலாகக் கட்டி, சுவாமிகளின் விக்கிரகத்தை 1925 ஜனவரி 7ஆம் தேதி பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.