சர்வ சங்கரி மாதங்கி சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவம்

0 439

சர்வ சங்கரி மாதங்கி சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவம்

 பராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள். லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் இந்த தேவி அமர்ந்தருள்கிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள்.

Basara2

 மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது. மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும் போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானமும் இவள் புகழ் பாடுகிறது. வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும் இவள் அருள் கட்டாயமாகத் தேவை.

 சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமே மாதங்கி. லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் இவள், அந்த லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயானவள். இவளின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. கேயம் எனில் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக இத்தேவி விளங்குகிறாள்.

 கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு கீழ் இரு திருக்கரங்களால் அதை மீட்டிக் கொண்டும் மேலிரு கரங்களில் சம்பா நெற்கதிர்களையும் கரும்பு வில்லையும் ஏந்தியுள்ளாள். மற்ற நான்கு திருக்கரங்களில் கிளி, சாரிகை ஆகிய பறவைகளும் பாசமும் அங்குசமும் அலங்கரிக்கின்றன. திருமுகம் பொலிவாய்த் துலங்க, நெற்றியில் கஸ்தூரி திலகம் பளிச்சிடுகிறது.

 திருமுடியில் சந்திர கலையுடன் கூடிய கிரீடம் மின்னுகிறது. சர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிகிறாள். பருத்து நிமிர்ந்த மார்பகங்களின் கனத்தால் இடை துவண்டு உள்ளது. மரகத மணியின் நிறத்தைப் போல ஜொலிக்கும் பச்சை நிற மேனியள். வலது பாதத்தை மடித்து, இடது பாதத்தை தொங்கவிட்ட நிலையில் அருள்பவள். செவிகளில் சங்கினால் ஆன காதணிகளை அணிந்துள்ளாள்.

 மாதங்கி உபாசனை சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை அதி சீக்கிரத்தில் அருளும்; விசேஷமான இன்பக் கலைகளில், நுண்கலைகளில், இன்னிசைக் கலைகளில் உபாசகனுக்கு வெற்றி எளிதில் கிட்டுகிறது. ஆனால், உலகியலை ஒரு சேறு போலச் செய்து கொண்டு அந்தச் சகதியில் வீழ்ந்தாலும் முற்றிலும் அதிலேயே மூழ்கிவிடுவதில்லை. உலகியலின் பற்றிலேயே பேரின்பத்தைக் கண்டு அப்பேரின்ப வாழ்வில் எக்கணமும் வழுவாமல் இருப்பதே இந்த மாதங்கி உபாசனையின் ரகசியமாகும்.

  லலிதா திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் ஸ்ரீநகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த மாதங்கியுடையதே. லலிதா திரிபுரசுந்தரியிடம் இருந்து முத்ராதிகாரம் எனும் ‘றிளிகீணிஸி ளிதி கிஜிஜிளிஸிழிணிசீ’ பெற்றவள்! அதனால் லலிதையின் மந்த்ரிணீ என அழைக்கப்படுகிறாள்.

 பதினாறு நாமங்களால் அன்னை மாதங்கியை அர்ச்சித்து அனைத்து நலன்களையும், பெறலாம்.

சங்கீதயோகினி,

ச்யாமா,

மந்த்ரநாயிகா,

ச்யாமளா,

மந்த்ரிணீ,

ஸசிவேசானீ,

ப்ரதானேஸ்வரி,

ஸுகப்பிரியா,

வீணாவதி,

வைணிகீ,

முத்ரிணீ,

ப்ரியகப்ரியா,

நீபப்ரியா,

கதம்பேசீ,

கதம்பவனவாஸினி,

ஸதாமதா.

சஞ்சலமின்றி அர்ச்சிப்பவர்களின் இல்லங்களில் லட்சுமி தேவி நித்யவாசம் செய்வாள்.

 ருதுவாகாத பெண்கள் இவள் ஆராதனையால் ருதுவாவார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேர்வர். சோம்பல், பயம், துக்கம் இம்மூன்றும் இவளை ஆராதிப்பவர்களுக்குக் கிடையாது. மாதங்கி உபாசனையைச் செய்தால் வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்தவராக விளங்கலாம். உலகைத் தன் வசம் கொள்ளலாம்.

 மாதங்கியே சர்வ சங்கரி

 எல்லா பாக்கியங்களையும் பெற மல்லிகை, ஜாதி மல்லி ஆகிய மலர்களால் இத்தேவியை அர்ச்சிக்க வேண்டும். அரச போகங்களை வேண்டுவோர் வில்வதளங்களாலும் விசேஷமாக தாமரை மலர்களாலும் பூஜிக்க வேண்டும். சொல்வன்மை, கவிபாடும் திறமை வேண்டுவோர் செம்பருத்திப்பூக்களால் இத்தேவியை ஆராதனை புரியவேண்டும். செல்வவளம் சிறக்க கருங்குவளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மிதமிஞ்சிய செல்வத்தையும் ஞானத்தையும் நல்ல புகழையும் முக்தியையும் தரவல்ல மதங்கமுனிவரின் மகளான மாதங்கி.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.