நீங்கள் எங்கு இருந்தாலும் ! என்ன செய்தாலும் ! அதை நான் அறிவேன் – பாபா

8

 சாய் அருள் பெற்ற ஒருவர், சாய் பற்றி நினைத்த ஒருவர், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் பாபாவின் பார்வையில் இருந்து தப்பியதே இல்லை . பாபா தம் பக்தர்கள் ஒவ்வொருவரையும் தம் பார்வைக்குள்ளேயே வைத்திருந்தார். இப்போதும் கூட அவர் பார்வையில் இருந்து எந்த ஒரு பக்தரும் விலகி விட முடியாது. எந்த பக்தன், என்ன செய்கிறான்? எந்த பக்தன், எத்தகைய வேண்டுதலுடன் தன்னை தேடி, நாடி வருகிறான் என்பதெல்லாம் இறை அவதாரமான சாய்பாபாவுக்கு மிக,மிக துல்லியமாகத் தெரியும்.

 அதனால்தான் பாபா, ஆத்ம தாகத்துடன் வந்தவர்களை மசூதிக்குள் வரவேற்று தன்னுடன் சேர்த்துக்கொண்டார். சுயநலத்துடன் வந்தவர்களை அவர் தன்பக்கம் அணுகக்கூட விட்டதில்லை. எந்த ஒருபக்தனும், மனத்துக்குள் எது பற்றி நினைத்தாலும் அதுவும் பாபாவுக்கு தெரிந்து விடும். அவரிடம் இருந்து தப்பவே முடியாது. ஒரு முறை பாபா தம் பக்தர்களிடம், “நீங்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் அதை நான் அறிவேன்” என்றார். அதை அவர் தம் வாழ்நாளில் பல தடவை நடத்தி காட்டினார். 1915-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அற்புதம் இது. மும்பையைச் சேர்ந்த பலராம் மன்கர் என்ற பக்தர், சீரடிக்கு சென்று சாய்பாபாவை வழிபட முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் சாய்பாபா மீது மிகுந்த பக்தி கொண்ட தார்க்காட் என்பவரை சந்தித்து சீரடி செல்வது பற்றி கூறினார். “பாபாவுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமானால் தாருங்கள். கொண்டு போய் ஒப்படைத்து விடுகிறேன்” என்றார்.

 அதைக்கேட்டதும் தார்க்காட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பாபாவுக்கு கொடுத்து அனுப்ப ஏதாவது உணவுப்பொருள் கிடைக்குமா என்று தேடினார். எதுவும் கிடைக்கவில்லை. அன்றைய தினம் காலை பாபா படம் முன்பு நைவேத்தியமாக படைத்த பால் கேக் மட்டுமே இருந்தது. பொதுவாக நைவேத்தியமாக படைத்ததை எடுத்து மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். என்றாலும் வேறு வழி இல்லாததால் அந்த “ பால் கேக்” கை எடுத்து நன்றாக பார்சல் செய்து அதை பாபாவிடம் கொடுத்து விடும்படி பலராம் மன்காரிடம் தார்க்காட் கொடுத்தார். அந்த பால் கேக் பார்சலை வாங்கிக்கொண்டு பலராம் சீரடிக்கு புறப்பட்டு வந்தார். சீரடியில் விடுதி ஒன்றில் தங்கினார்.

 அன்று மதியம் அவர் துவாரகமாயிக்கு சென்று பாபாவை பார்த்து தரிசனம் செய்தார். தான் கொண்டு வந்த பொருட்களை கொடுத்து பாபாவிடம் ஆசி பெற்றார். விடுதிக்கு திரும்பிய பிறகுதான், தார்க்காட் கொடுத்து அனுப்பிய பால் கேக்கை மறந்து விட்டது அவர் நினைவுக்கு வந்தது. சரி பிற்பகல் மீண்டும் பாபாவை தரிசனம் செய்யச் செல்லும் போது கொண்டு போய் கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் பிற்பகலில் பாபாவை பார்க்க சென்ற போதும், தார்க்காட் தந்த பால் கேக்கை எடுத்து வர மறந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு அந்த கேக் பற்றிய நினைவே வரவில்லை. பாபா அவரைப் பார்த்து மெல்லிதாக சிரித்தார். “மும்பையில் இருந்து எனக்கு என்ன கொண்டு வந்தாய்? என்று கேட்டார். அதற்கு பலராம், “ எதுவும் கொண்டு வரவில்லை என்றார். “அப்படியா… எனக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வந்தாயா? என்று பாபா மீண்டும் கேட்டார்.

 அப்போதும் பலராமுக்கு தார்க்காட் கொடுத்து அனுப்பிய பால்கேக் நினைவுக்கு வர வில்லை. “ எதுவும் கொண்டு வரவில்லை” என்றார். பாபாவும் விடவில்லை. “நீ சீரடிக்கு புறப்படும் போது, என் பக்தை தார்க்காட் எனக்கு தின்பண்டம் தரவில்லையா?” என்றார். அப்போது தான் பலராமுக்கு மண்டையில் ‘சுரீர்’ என்று உறைத்தது. தார்க்காட் கொடுத்து அனுப்பிய பால்கேக்கை சுத்தமாக மறந்து விட்டோமே என்று வருந்தினார். பாபாவிடம் மன்னிப்புக் கேட்ட அவர் விடுதி நோக்கி ஓடினார். அங்கு படுக்கை அருகில் தனியாக வைத்திருந்த “ பால் கேக்” பார்சலை எடுத்து கொண்டு மீண்டும் மசூதிக்கு திரும்பி – ஓடி வந்தார். பாபாவிடம் பால் கேக்கை பவ்வியமாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட சாய்பாபா அந்த கேக்கை ரசித்து, ருசித்து சாப்பிட்டார். இந்த நிகழ்வு மூலம் பாபாவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப இயலாது என்பது உறுதியானது.

 #swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at :[email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.