ஒரு பிடி அரிசி,ஒரு கோடி புண்ணியம்!!
காஞ்சி ஸ்ரீ மகாஸ்வாமிகள் பிடி அரிசித்திட்டம்.ஒவ்வொரு மனிதனும் ஐந்து கடன்களுடன் பிறக்கிறான்.அவை தெய்வ கடன்,பித்ரு கடன்,ரிஷி கடன்,மனித கடன் மற்றும் பூத கடன்.மனித கடன் தவிர மற்ற நன்கு கடன்களை இறைவனுக்கு பூஜை செய்தல்,பித்ருகளுக்கு மற்றும் ரிஷிகளுக்கு தர்ப்பணம் அளித்தல்,மற்ற ஜீவராசிகளுக்கு உணவு அளித்தல் போன்றவற்றால் நிவர்த்தி செய்துவிடலாம்.மனித கடனுக்கு தினமும் வறியவர்க்கு உணவு அளிப்பது முக்கிய கடமை.
தற்போது தினமும் ஒருவருக்கு உணவு அளிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத நிலை.ஒவ்வொருவரும் இந்த மனித கடனை தீர்க்க வேண்டிய அவசியத்தை மனதில் கொண்டு ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமிகள் பிடி அரிசித்திட்டம் என்ற முறையை நமக்கு காட்டிக்கொடுத்தார்கள்.அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் சோறு சமைக்கும் முன் ஒரு பிடி அரிசியை தனியாக ஒரு இடத்தில சேமிக்க வேண்டும்.அத்துடன் ஒரு ரூபாய் காசும் போடலாம்.இவ்வாறு சேமிக்கப்பட்டதை ஒருவர் அல்லது இரண்டு பேர் எல்லா வீடுகளுக்கும் சென்று எடுத்து வந்து கிராமத்தில் உள்ள அம்மன்கோயில் அல்லது ஈஸ்வரன் கோயில் அல்லது பெருமாள் கோயில் ஏதாவது ஒன்றில் சுவாமிக்கு நிவேதனம் செய்து படைக்கப்பட்ட அந்த பிரசாதத்தை எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்கலாம்.பசியால் வாடும் மக்கள் இறை பிரசாதத்தை உண்டு பசியாறுவார்கள்.சேர்ந்த பணத்தை கொண்டு சுவாமிக்கு அபிஷேக பொருள்,எண்ணெய்,புஷ்பங்கள்,வஸ்திரம் போன்றவற்றை வாங்கலாம்.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதற்கேற்ப இறை அருளும் புண்ணிய சக்தியும் எல்லோருக்கும் கிடைக்கும்.இறை அருளால் இவ்வுலகில் எல்லா நலமும் பெற்று வாழ்வார்கள்.இறைவன் பிரசாதம் உணர்வைத்தூண்டி மனதை தூய்மைப் படுத்தும் வல்லமை வாய்ந்தது.
குறிப்பு: ஈஸ்வரன் கோயிலில் மகாப்ரதோஷம் அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிடி அரிசித்திட்ட வழிபாட்டை செய்வது அளப்பரிய புண்ணியசக்தியை கொடுக்கும்.
பெருமாள் ஆலயத்தில் திருவோணம் நக்ஷத்ரம் அல்லது சனிக்கிழமை அன்று செய்வது மிகவும் விசேஷ பலனைக் கொடுக்கும்.ஊரில் உள்ள அம்மன் கோயிலில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்வது விசேஷம்.
ஹர ஹர சங்கர ,ஜெய ஜெய சங்கர.