அதிசய விநாயகர் கோயில் – புராணக் கதைகள்!

179

அதிசய விநாயகர் கோயில் – புராணக் கதைகள்!

கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் விநாயகர் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளிலும், ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளிலும் இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் செய்யப்படுகிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி வரை கறுப்பு நிறத்திலும் நிறம் மாறி காட்சி அளிப்பது தனி சிறப்பு. இங்குள்ள விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரையில் உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரையில் தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் மாறி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்பு புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார். இந்த அதிசய விநாயகர் திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்ற அபூர்வ வகையை சார்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.

வீரகேரள வர்மா என்ற மன்னர், ராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக ராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடிய போது அவரது காலில் ஒரு சிறிய கல் இடறியது. அந்தக் கல்லை எடுத்து பார்த்த போது அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். ராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரள வர்மா தான் நீராடிய போது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல் தான் தெரிகிறது.

நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யுங்கள். இது எனது பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்து பராமரித்தார்.

நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர் தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.