அரிதாரமங்கலம் கைலாசநாதர் கோயில் – புராணக் கதைகள்!

181

அரிதாரமங்கலம் கைலாசநாதர் கோயில் – புராணக் கதைகள்!

திருவண்ணாமலை மாவட்டம் அரிதாரிமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயில் கைலாசநாதர் கோயில். இந்தக் கோயிலில் கைலாசநாதர் மூலவராகவும், பெரியநாயகி அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இது சப்த கைலாய சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

மிகவும் அழகான தோற்றத்துடன் கைலாசநாதர் சாந்நித்தியம் நிறைந்தவராகவும் காணப்படுகிறார். இறைவி பெரியநாயகி என்கிற ப்ரஹன் நாயகி மிக மிக வசீகரத் தோற்றத்துடன் பார்ப்பவர்களைக் கொள்ளைக் கொள்ளும் அழகுடனும், மிகவும் சாந்தமாகவும் வேண்டும் வரங்களையெல்லாம் உடனே அருளுபவளாகவும் வீற்றிருக்கிறார். மகாவிஷ்ணு இங்கு தங்கி எல்லாருக்கும் மங்களத்தை வாரி வழங்குவதாலும் அரிதாரமங்கலம் என்று பெயர் பெற்றது.

இப்பரந்த உலகத்தை ஒரு தேவாலயமாகக் கருதினால் திருவண்ணாமலை தலத்தை அதன் கருவறையாகக் கொள்ளலாம். அருணாச்சல மலையே அக்கறையிலுள்ள சிவலிங்கம் ஆகும். முழு முதல் கடவுளான பரம சிவன் தான் இங்கு அருணாச்சலமாக காட்சி தருகிறார். நான்முகனுக்கும், திருமாலுக்கும் அக்னி மலையாகக் காட்சி தந்த ஞானகுரு, உலகம் உய்யும் பொருட்டு கோதிர் லிங்க வடிவமாய்த் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி,

காசியில் இறந்தால் முக்தி,

சிதம்பரத்தை பார்த்தால் முக்தி

திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி

படைக்கும் தொழில் புரியும் கடவுளுக்கும் பிரம்ம தேவனுக்கும் காத்தல் கடவுளான மகா விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற சர்ச்சைக்கு விடை காண திருவுளம் கொண்டார் முழு முதல் கடவுளான பரமேஸ்வரன். ஒரு பிரம்மாண்டமான அக்னி மலையாக ஓங்கி நின்றார். இந்த மலையினுடைய முடியையும் அடியையும் யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவறே பெரியவர் என்று பிரம்மாவும் திருமாலும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள்.

அதன்படி, பிரம்மன் அன்னப்பறவையாகவும், விஷ்ணு பகவான் வராகமாகவும் உருவெடுத்துக் கொண்டு அம்மலையின் முடியையும் அடியையும் தேடி புறப்பட்டனர். விஷ்ணு அடிமுடியை காணாமல் திரும்பி வந்துவிட இந்த அரிதாரமங்கலத்தில் தங்கியதாக வரலாறு கூறுகிறது.

இது தவிர சப்த கைலாய சேத்திரத்தில் ஒன்றான அரிதாரமங்கலம் செய்யாற்றின் கரையில் உள்ளது. உத்தர வாகினியான செய்யாற்றின் கரையில் சப்த கைலாய ஷேத்திரங்களும் சப்த கரைகண்ட ஷேத்திரங்களும் உள்ளது.

இறைவனை மனம் முடித்து காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வந்து கொண்டிருந்த அன்னை பார்வதி தேவிக்கு தண்ணீர் தாகம் எடுக்க தன் மைந்தனான முருகனிடம் தண்ணீர் கேட்க முருகனும் தண்ணீர் மலையை நோக்கி அம்பு எய்ய அம்பானது, அங்கு தவம் செய்து கொண்டிருந்த 7 ரிஷிகளின் தலையை கொய்து தீர்த்த மலையை அடைய, தீர்த்த மலையிலிருந்து அந்த தண்ணீரில் அவர்களது உதிரம் கலக்க தண்ணீர் சிகப்பாக மாற பின் செய்யாறு என்ற நதியானது சிகப்பாக இருந்தாலும் முருகன் என்ற சேயியால் உண்டாக்கப்பட்டதாலும் செய்யாறு என்றும் பெயர் பெற்றது.

ஏழு ரிஷிகளின் நிலையைக் கண்ணுற்ற தவற்றுக்கு வருந்தி இறைவனை நோக்கி தவம் செய்ய, இறைவனும் உன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க 7 லிங்கங்களை செய்யாற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று சொல்லவே முருகப் பெருமானும் 7 இடங்களில் சிவனை பிரதிஷ்டை செய்ய அதுதான் சப்த கரைகண்ட ஷேத்திரமாயிற்று, அதே போன்று பார்வதி தேவியும் மனம் வருந்தி தன்னால் தனது குழந்தைகளுக்கும் இந்த நிலை வந்தது என்று வருந்தி இறைவனிடம் வேண்ட இறைவனும் நீ 7 இடங்களில் லிங்கத்தை வைத்து வழிபடு என்று பணிக்க அந்த 7 இடங்களிலும் சப்த கைலாச ஷேத்திரமாயிற்று. அரிதாரமங்கலம் செய்யாற்றின் கரையில் இருப்பதாலும் இறைவன் இறைவி திருநாமம் பெரியநாயகி கைலாசநாதர் இருப்பதாலும் இதுவும் கைலாச ஷேத்திரமாக கருதப்படுகிறது.