ஆன்மீகம் அறிவோம்: பிச்சைக்காரனும், மகான் – புராணக் கதைகள்!

93

ஆன்மீகம் அறிவோம்: பிச்சைக்காரனும், மகான் – புராணக் கதைகள்!

கோயில் வாசலில் நின்று ஒரு பிச்சைக்காரன் தினந்தோறும் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தான். அப்போது ஒரு மகான் வந்தார். அவரைப் பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசி வரை இப்படித்தான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு மகானோஒ, அது உனது தலைவிதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படித்தான் இருக்கும் என்றார்.

பிச்சைக்காரன், சாமி எனது தலைவிதி மாறாதா? மாறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு சாமியார் நீ சிவபெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்புள்ளது. அவரை சென்று தரிசனம் செய்துவிட்டு வா என்றார். மகான் கூறியதைப் போன்று பிச்சைக்காரன் சிவபெருமானை பார்க்க புறப்பட்டான்.

நீண்ட நேரமானதால், இரவு ஓய்வு எடுக்க ஒரு செல்வந்தரின் வீட்டு கதவை தட்டி, இன்று இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டான். செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க, பிச்சைக்காரன் நடந்தவற்றை கூறினான். அதற்கு செல்வந்தரும் அவரது மனைவியும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்க பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்டான்.

எங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பிறவியிலிருந்து வாய் பேச மாட்டாள். அவள் எப்போது பேசுவாள் என்று சிவபெருமானிடம் கேட்டு சொல்ல வேண்டும் என்று செல்வந்தர் கூறினார். அதற்கு பிச்சைக்காரனோ சம்மதம் தெரிவித்து அங்கேயே இரவு ஓய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான்.

அப்போது நீண்ட தூரம் கடந்து சென்ற பின் பெரிய மலை வந்தது. அதனை கடக்க முடியாமல் இருந்த போது ஒரு மந்திரவாதி அங்கு வந்தார். அவர், பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என் மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன். நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றார். அதற்கு பிச்சைக்காரனோ, என்ன உதவி என்று கேட்கவே மந்திரவாதி நான் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன்.

நீ சிவபெருமான் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்ல வேண்டும் என்றார். அதற்கு பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையை கடந்து பிச்சைக்காரனை விட்டு சென்றார். மீண்டும் பிச்சைக்காரன் நடக்க ஆரம்பித்தான். அப்போது ஒரு ஆறு வந்தது. அந்த ஆற்றை கடந்து சென்றால் தான் சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.

ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ சிவபெருமானிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை கொண்டு சென்று விட்டது. பிச்சைக்காரனும் ஒரு வழியாக சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான்.

சிவபெருமானை பார்த்து ஆசி பெற்றான்.  சிவபெருமான் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேட்டு பெற்று கொள் என்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார். அதற்கு பிச்சைக்காரனோ யோசித்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். சிவபெருமான்  மூன்று தான் கேட்க வேண்டும் என்றார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான்.

நாம் எப்படியாவது மீதி காலத்தை பிச்சை எடுத்து காலத்தை கழித்துவிடலாம். அந்த மூவரின் பிரச்சனையாவது தீரட்டும் என்று எண்ணி 3 பேரது பிரச்சனையை சிவபெருமான் சொல்லி அதன் தீர்வையும் அறிந்து கொண்டு திரும்பி வந்தான்.

முதலில் ஆமை, எனது கேள்விக்கு சிவன் என்ன பதில் சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஓட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்தி வரும் என்றான். உடனே ஆமையும் தனது ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு பறந்து சென்றது.

அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ மந்திரக்கோலை விட வேண்டும் என்றான். மந்திரவாதியும், அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு முக்தி அடைந்தார்.

இறுதியாக செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது மனதிற்கு பிடித்தவனை பார்க்கிறாளோ அப்போது பேசுவாள் என்று பிச்சைக்காரன் சொன்னான். மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டாள். தனது மகள் பேசியக் கேட்டு ஆனந்தம் கொண்ட செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார்.

அன்று வரை பிச்சைக்காரனாக இருந்தவன், அதன் பிறகு ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான். இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும்.

அதே போல் கடவுள் நம் தலையில் எழுதிய விதியை அவரால் மட்டுமே மாற்றி எழுத முடியும். நம்மால் விதியை மாற்ற முடியும் என்று எண்ணி வீதிக்கு வராமல் இருந்தால் போதும்.

ஓம் நமசிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..