உண்மையில் கெளரவர்கள் எத்தனை பேர்? பார்ட் -1!

463

உண்மையில் கெளரவர்கள் எத்தனை பேர்? பார்ட் -1!

பாண்டவர்கள் 5 பேர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், 6ஆவதாக சூரியன் அருளால் குந்தி தேவிக்கு மகனாக பிந்தவர் கர்ணன். செஞ்சோற்று கடன் தீர்க்க வேண்டி கௌரவர்களுடன் போரிட்டு கர்ணன் உயிரிழந்தான். அதன் பிறகு தான் கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று பாண்டவர்களுக்கே தெரிய வந்தது.

அவருக்கு மட்டுமல்ல, ஆசாரியர் துரோணருக்கு சீடனாக கிருபர் சிஷ்யனாக போரில் தங்களால் கொல்லப்பட்ட துரியோதணன் உள்பட நூறு கௌரவர்களுக்கும், அந்த வம்சத்தின் மூத்த சகோதரனாக இருந்த தர்மர் அந்திம காரியங்களை செய்தார். ஆனால் கௌரவர்கள் நூறுபேரும் குருச்சேத்திர யுத்தத்தில் மடிந்த சில ஆண்டுகளில் இறந்து போன அவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு அந்திம க்ரியை செய்தது கௌரவர்களில் ஒருவன் என்பது தெரியுமா?

கௌரவர்கள் நூறுபேர் இறந்த பின் கௌரவரா என கேட்காதீர்கள். கௌரவர்கள் நூற்றொருவர் பின் அவர் ஏன் மற்ற கௌரவர்களுக்கு அந்திம காரியம் செய்யவில்லை என்றால் அதுவும் காரணமாகவே. திருதராஷ்டிரனின் பட்ட மகிஷி காந்தாரியின் மகன்களுக்கு அவர்களது சந்ததிகளுடன் போரில் மரணமேற்பட்டதால் பாண்டுவின் மகன்களில் மூத்தவரான தர்மர் அந்திம காரியம் செய்தார். தன் தாயின் கர்ப்பத்தில் உதித்தவர் ஆகையால் கர்ணனுக்கும் செய்தார்.

யுயுத்சு யார்?

ஆனால் திருத்ராஷ்ரனுக்கு அந்திம காரியம் செய்தது யுயுத்சு என்னும் கௌரவன். யார் இந்த யுயுத்சு? இவன் எப்படி கௌரவர்களில் ஒருவன்? ஏன் இவன் திருத்ராஷ்டிரனுக்கு மட்டும் அந்திம காரியத்தை செய்தான் என்கிறோம்? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். அதற்கு ஒரு சம்பவத்தை விளக்குகிறேன் உங்களுக்காக…

குருசேத்திர யுத்தத்திற்காக தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நின்றிந்தன. எதிர்ப்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.

இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை  ஆகிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராக துடிப்புடன் காத்திருந்தனர். அதிவிரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது. இடைபட்ட நேரத்தில் அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு வணங்கி நேராக பார்த்து மெல்லிய குரலில் உரிமையுடன் கேட்டான்.

கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை.

கண்ணன்: என்ன கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் கீதையில் ஏதேனும் சந்தேகமா?

அர்ச்சுனன்: அது இல்லை கண்ணா, இந்த போரில் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை? அதாவது தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது. சரிதானே! அப்படியானால் கௌரவர்கள் மொத்த பேரும் அழிவார்கள் அல்லவா?

கண்ணன்: அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன். ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர் யாரேனும் இருக்கலாம் அல்லவா?

அர்ச்சுனன்: கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் கிருபர் சல்லியன் போன்ற நல்லவர்களெல்லாம் கூட, கௌரவர்களோடு கூட்டு சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிற போது கௌரவர்களில் யாரேனும் ஒரு நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே? நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தானே கண்ணா?’’ என்றான்.

கண்ணன்: நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா! கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.

அர்ச்சுனன்: நீ சொல்வது புரியவில்லை.

கண்ணன்: பொறுத்திருந்தால் எல்லாம் புரியும்.

இவர்கள் இருவரும் இப்படி உரையாடிக் கொண்டிருந்த போது தர்மபுத்ரன் யுத்த களத்திற்கு வந்து முக்கியமான ஒரு அறிவிப்பை அறிவித்தார். வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது. இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.

எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம். அதே போன்று துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம். வீரர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டு உணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால்  இது கடைசி சந்தர்ப்பம் என்றான். மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.

அப்படி அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பிலேயே போரிடுவார்கள் என்று அறிவித்தார் தர்மர்.  அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள். தர்ம புத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது. இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? (இன்றைய அரசியல் சூழலை நினையாதீர்கள்).

தர்மர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி கூட அசையவில்லை. துரியோதனனின் படைவீரர்களை தர்மர் கேள்விக் குறியுடன் பார்த்தார். அதிலிருந்து ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கிக் கொண்டு கௌரவர் பக்கமிருந்து பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது.

அது யார் என்று துரியோதனன் உரத்த குரலில் கேட்டான். மேலும், தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பும் எய்வதற்கு முற்பட்டான். பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பிதாமகர் பீஷ்மர். கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய ஒன்று போல் தான் அவர் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

இருந்தாலும், அவன் யார் என்பதை பீஷ்மர் கண்டு கொண்டு விட்டார்.  அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது, அவரை தடுத்து நிறுத்திய பீஷ்மர் அவனைப் போகவிடு. தர்மபுத்ரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு. நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப்போவதில்லை. மேலும் நீ அவனை இப்போது கொல்ல போகிறாய்?

நம்ம அணியிலிருந்து சென்று பாண்டவர் அணிக்கு சென்றால், போர் தொடங்கியதும் நமது வீரர்களால் கொல்லப்படுவான். அதுவே அவனுக்கான தண்டனை என்று பீஷ்மர் கூறினார். இதையடுத்து, துரியோதனன் அம்பை அம்பறாத் தூணியில் செருகினார்.

இதன் மீதி பகுதியை அடுத்த பாகத்தில் பார்ப்போம்…