எட்டுக்குடி முருகன் – புராணக் கதைகள்!

234

எட்டுக்குடி முருகன் – புராணக் கதைகள்!

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி என்ற பகுதியில் உள்ளது முருகன் கோயில். இந்தக் கோயிலில் முருகன் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் சஷ்டி விரதமும், கேதார கௌரி விரதமும் ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் தோன்றியது இந்தக் கோயில் தான். இந்தக் கோயிலில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

வான்மீகர் என்ற சித்தர் இந்தக் கோயிலில் சமாதியானார். கோயிலுக்குள்ளாக இருக்கும் வன்னி மரத்தடியில் இவரது சமாதி இருக்கிறது. பார்க்கும் மன நிலைக்கு ஏற்றவாறு தனது உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருகிறார். முதியவராக நினைத்துப் பார்த்தால் முதியவராகவும், குழந்தை என்று நினைத்துப் பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக நினைத்துப் பார்த்தால் இளைஞனாகவும் பார்ப்பவர்களுக்கு காட்சி தருகிறார்.

பொதுவான அம்சம்:

கோயில் பிரகாரத்தில் முருகனுடன் போருக்கு சென்ற நவ வீரர்களுக்கு சிலை இருக்கிறது. கூத்தாடும் கணபதி, ஜூரதேவர், சீனிவாச சௌந்தராஜபெருமாள், ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும் இந்தக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர்.

பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தனது உருவத்தை மாற்றிக் கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்துப் பார்த்தால் முதியவர் வடிவிலும், இளைஞனாக நினைத்துப் பார்த்தால் இளைஞராகவும் காட்சி தருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்தக் கோயிலில் விழா நடக்கிறது. கோயில் முன்புள்ள சரவணபொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் சிறப்பு தன்மை கொண்டது. சவுந்தரநாயக்கர், ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகப் பெருமானுக்கு தாய், தந்தையாக அருள் பாலிக்கின்றனர்.

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும் இந்தக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர். முருகப் பெருமான் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். ஆதலால், பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு கூட்டி வந்தால் அவர்களது பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு: எட்டுக்குடி முருகன்:

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள பொருள் வைத்த சேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவன் இருந்தான். அவன் அதிக தெய்வத்தன்மை கொண்டவனாக திகழ்ந்தான். எப்போதும், முருகனின் ஆறெழுத்து மந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்தான். மேலும், அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவனின் சிலையை செய்தான். அப்போது அந்த நாட்டை ஆட்சி செய்த சோழ மன்னன், சிலையின் அழகில் மயங்கி இனிமேல், இது போன்று ஒரு அழகிய சிலையை செய்யக் கூடாது என்பதற்காக சிற்பியின் கட்டை விரலை வெட்டினான்.

வெட்டப்பட்ட கை கட்டை விரலுடன் கிராமத்திற்கு வந்தான். எனினும், கடுமையான முயற்சி எடுத்து, அது போன்ற ஒரு அழகான சிலையை செய்தான். அந்த சிலையை, குறுநில மன்னனான முத்தரசன் பார்த்தான். அப்போது, அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. மேலும், வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்த நேரத்தில் வரவே, அந்த மயிலை எட்டிப்பிடி என்று ஆணையிட்டான். காவலர்களும், மன்னனின் ஆணைப்படி, அந்த மயிலை எட்டிப்பிடித்தனர். ஆனால், மயிலின் கால்களை சிறிதளவு உடைத்தனர்.

அதன் பிறகு உடைக்கப்பட்ட நிலையில், மயில் சிலையாகவே மாறி அதே இடத்தில் நின்றது. பறக்க முயன்ற மயிலை எட்டிப்பிடி என்று மன்ன்ன் ஆணையிட்டதால் எட்டிப்பிடி முருகன் கோயில் என்றானது. நாளடைவில் எட்டிப்பிடி என்ற வார்த்தையானது எட்டிக்குடி என்று மாறியது. இதுவே ஊரின் பெயராகவும் ஆனது. இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அந்த சிலையை எண்கண் என்ற பகுதியில் வைத்தான். சிற்பி முதலில் செய்த சிலையானது சிக்கலிலும், அடுத்த சிலையானது எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்று சிலைகளும் உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.