எதைப் பற்றியும் யோசிக்க கூடாதா? உண்மை கூறும் புராணக் கதைகள்!

69

எதைப் பற்றியும் யோசிக்க கூடாதா? உண்மை கூறும் புராணக் கதைகள்!

ஒருவன் வாழ்க்கையில் மிகுந்த கவலையில் இருந்தான். தினமும் ஆண்டவனிடம் ஏன் எனக்கு இவ்வளவு பிரச்சனைகளை கொடுக்கிறாய், சிறிது கருணை காட்ட கூடாதா என மன்றாடினான். பல நாட்கள் இப்படி கழிய, ஒரு நாள், ஒரு குரல் கேட்டது – நாளை காலை உன் கவலைகளை எல்லாம் ஒரு மூட்டை கட்டி கோவில் முன்னே இருக்கும் மைதானத்திற்க்கு கொண்டுவா, உனக்கு ஒரு விடை அளிக்கிறேன் என்று.

அவனும் எல்லா கவலைகளையும் ஒரு பெரிய மூட்டை கட்டி மறு நாள் காலை கொண்டு போனான். போகும் வழியில் பார்த்தால், கிராமத்தில் எல்லோரும் தம் தம் மூட்டைகளை, எல்லாம் பெரிய பெரிய மூட்டைகள், என தூக்கி கொண்டு போய் கொண்டிருந்தார்கள். சிலர் தூக்க முடியாமல் இழுத்து கொண்டிருந்தார்கள், சிலர் தம் மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்தார்கள்.

கேட்ட போது, கடவுள் என் கவலைகளுக்கு விடை தருகிறேன் என்று சொன்னார், அதான் போய் கொண்டு இருக்கிறேன் என்றார்கள். எல்லோரும் கோவில் முன்னே சேர்ந்ததும், மீண்டும் அதே குரல் – நீங்கள் உங்கள் மூட்டையை உங்கள் விருப்பப்படி வேறொருவரிடம் மாற்றி கொள்ளலாம், ஆனால் மூட்டை உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கவோ பார்க்கவோ கூடாது – என்று கேட்டது. சிலர் தம் மூட்டையை வேறொருவரிடம் மாற்ற முயன்றார்கள். இப்பொழுது தம் தம் மூட்டை மற்றவர்களுடைய மூட்டையை விட சிறியதாக தோன்றியது. மாற்ற தயங்கினர்.

கடைசியில் பார்த்தால், எல்லோரும் தம் தம் மூட்டைகளை கெட்டியாக பிடித்து கொண்டார்கள். தம் மூட்டைகளையே திரும்ப எடுத்து கொண்டு வீடு திரும்பினார்கள். யாருக்குமே கவலை இல்லை என்று சொல்ல முடியாது. அவரவருக்கு தம் தம் கவலைகள் பெரியது. நாம் நம் பண பிரச்சனையை மற்றவரிடம் உள்ள சர்க்கரை நோயை வாங்கி மாற்றி கொள்ள முடியுமா? நம் மனதின் எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி அதிகமான சிந்தித்தல் தான் கவலை.

இந்த விஷயம் கடந்த காலத்தில் நடந்த சம்பவமாக இருக்கலாம் அல்லது வருங்காலத்தில் நிகழக்கூடிய விஷயமாக இருக்கலாம். எப்பொழுதும் அதன் விளைவுகளை பற்றியே யோசித்து மனதின் எண்ணங்களை அதிகப்படுத்தி கொள்கிறோம். அதை தவிர்த்து, அதை எப்படி அணுகுவது என்று யோசித்தால் தீர்வு கிடைக்கும்…