ஓணம் பண்டிகை வரலாறு – புராணக் கதைகள்!
ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது அங்கும் இங்கும் ஓடிகொண் டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது.
யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும், இதை அந்த எலி மிக சரியாக செய்து வந்தது.
எலியின் வாழ்நாள் குறுகியது என்பதால் அந்த எலியும் மரித்தது, சிவன் அந்த எலிக்கு மிகபெரிய வரத்தினை வழங்கினார். அடுத்த ஜென்மத்தில் அது மிகபெரிய இடத்தில் பிறக்க அருள்பாலித்தார் அது பிரகலாதன் வம்சத்தில் பேரனாக பிறந்தது.
ஆம், இரணியனின் மகனான அந்த பிரகலாதனின் பேரனாக அந்த எலி பிறந்திருந்தது.
என்னதான் பிரகலதனின் பேரன் என்றாலும் அசுரனுக்குரிய இயல்பும் அவனிடம் இருந்தது, அவனை அசுர கூட்டம் வளைத்தும் இருந்தது, குறிப்பாக அசுரகுரு சுக்கிராச்சாரியார் அவனை மிகபெரும் பிம்பமாக வளர்த்தெடுத்து கொண்டார்.
குருபக்தியில் மிக மிக உன்னதமான அவன், குருவிடம் தன்னை ஒப்புகொடுத்த அவன் அவர் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருந்தான். அந்த மரியாதையினை கொண்டே பலியினை ஆட்டுவித்தார் சுக்கிராச்சாரியார்.
அந்த பலி அசுர இயல்பும் பிரகலாதனின் பக்தியும் நிரம்ப கொண்டிருந்தான். அவன் பக்திமான், நல்ல மனம் கொண்டவன் ஆனால் குருவுக்கு கட்டுபட்ட மாணவனும் அசுர குலத்து பாசமும் கொண்டவனாய் இருந்தான்.
ஒரு கட்டத்தில் சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைபடி மிகபெரும் யாகங்களும் அதன் பலன்களும் பலியினை சக்திமிக்கவனாக்கின, தவம் பெற்ற முனிவர்கள் கூட அவனை அசைக்க முடியவில்லை.
யோகிகளும் , முனிகளும் இல்லாத இடத்தில் அதர்மம் அதிகரிக்கும், தர்மத்தின் வடிவான அவர்கள் இருக்கும் வரை அதர்மம் அங்கு காலூன்ற முடியாது, இதனால் அவர்களை குறிவைத்து அடித்தார் சுக்கிராச்சாரியார் , அதை செய்வ்வனே செய்தான் பலி.
சில முனிகளும் யோகிகளும் சீறியபொழுது “இது என் குருநாதர் உத்தரவு” என முழங்காலில் நின்று. தவத்தில் சிறந்த ஒரு முனி “எந்த குருவால் நீ பலமடைந்தாயோ, அந்த குருவினை நீ மீறும் நாளில் அழிவாய்” என சாபமிட்டு சென்றார், அதை பிரபஞ்சம் குறித்து கொண்டது.
சுக்கிராச்சாரி விக்ரஜித் என மிகபெரும் யாகம் செய்தார், அந்த யாகத்தின் விளைவால் பறக்கும் ரதம் வெல்லமுடியா ஆயுதம் என பல பலிக்கு கிடைத்தன, அதில் ஏறி விண்ணகம் சென்ற பலி வானலோகத்தையும் பிடித்து தேவர்களை விரட்டி அடித்தான்.
எங்கும் அசுர ஆட்சி நடந்தது, தர்மம் இல்லை. ஒரே ஒரு அசுர சக்தியாக பேயாட்டம் ஆடி கொண்டிருந்தது பலி கோஷ்டி, மூவுலகுக்கும் அவனே சக்கரவர்த்தி. யாராலும் வெல்லமுடியா அவன் மகாபலி என்றானான்.
அவன் அசுரனே தவிர மனதால் நல்லவன், தர்மத்தை தவிர எல்லாம் வாழட்டும் எனும் அளவு நல்லவன், அவன் குடிகளுக்கு நல்லவன் தன் நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி கொண்டிருந்தான்.
எல்லா அசுரனுக்கும் சுயநலமும் சுய குடும்ப நலமும் தன் மக்கள் நலனும் ஓங்கியிருக்கும். அது ராவணனுக்கு இருந்தது, சூரபத்மனுக்கு இருந்தது அப்படித்தான் மகாபலிக்கும் இருந்தது.
அதில் அவன் நாடு நலமாகவும் அவன் மக்கள் மகிழ்வாகவும் இருந்தனர், மற்ற உலகம் அழுதாலும் தன் உலகை நன்றாக வைத்து கொண்டான்.
தன் சக்தி இன்னும் மிஞ்சி இரேழு உலகையும் ஆள மிகபெரும் யாகங்களை செய்ய ஆரம்பித்தான் அந்த மாபெரும் யாகம் முடிந்தால் அவன் சக்திபெறுவதை தடுக்க முடியாது என உணர்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
தர்மத்தை காக்க அவதாரம் எடுத்தார் விஷ்ணு, குள்ள வாமணனாக உருவெடுத்தார். ஒரு அந்தண வடிவில் குடையும் கையில் கமண்டலமும் கொண்ட அந்தணராக 3 அடி உருவில் வந்து நின்றார்.
யாகத்தின் முழு பலன் என்பது அவன் தானம் கொடுத்து முடிவதில்தான் கிடைக்கும்.
ஆம், யாகம் செய்வது மட்டும் பலனளிக்காது. யாகம் முடிந்ததும் பல அந்தணர்களுக்கும் இன்னும் பலருக்கும் அவன் தானம் செய்யவேண்டும், அந்த தானத்தில் அவர்கள் அவனை வாழ்த்த வேண்டும், அந்த வாழ்த்தே யாகத்தை முழுமை அடைய செய்யும்.
தானத்துக்கும் தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தானம் என்பது பலனை எதிர்பார்த்து செய்வது, தர்மம் என்பது பலன் கருதாதமல் செய்வது.
கன்னிகா தானம் என்பார்கள் அல்லவா, கன்னியினை தானம் செய்தால் தன் சந்ததி வளரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அப்படி சொல்லபட்டது.
அப்படி மகாபலி தானம் செய்யும்பொழுது வாமணனும் கடைசி வரிசையில் வந்து நின்றார். அவர் வரும்பொழுது மன்னனிடம் தானம் செய்ய ஏதுமில்லை, ஆனால் யாக தத்துவபடி கடைசி ஆளுக்கும் தானம் செய்தாக வேண்டும்.
குள்ள வாமணன் மெல்ல வணங்கி கையேந்தி நின்றான், மகாபலிக்கு சிக்கலான நிலை அந்தணன் கையேந்திவிட்டான் ஏதும் கொடுத்தாக வேண்டும் ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.
வாமணன் மெல்ல சொன்னான் “மன்னா நானோ குள்ளன், என் கால்களோ சிறியவை. நானும் எல்லோரையும் போலத்தான் வந்தேன் ஆனால் 6 அடி மனிதரோடு என்னால் போட்டி போட்டு ஓட முடியவில்லை, நான் என்ன செய்வேன்?” என கலங்கினான்.
கலங்கிய வாமணனை கண்ட மகாபலி என்ன கேட்டாலும் தருவதாக வாக்களிக்க, மன்னா என் காலுக்கு 3 அடி நிலம் தா, நான் அதில் இருந்து தியானம் செய்வேன்” என மருகி நின்றான் அந்தணன்.
தள்ளி இருந்த சுக்கிராச்சாரிக்கு சந்தேகம் உண்டாயிற்று, இந்த வாமணன் தவம் இருக்க போகின்றானா, அதுவும் இந்த நாட்டிலா? என குழம்பியபடியே அருகில் வந்தார்.
வாமணின் கண்கள் காட்டிய தீர்க்கமும், புன்னகையும் ,தந்திரம் காடியமுகமும் அவன் சாதாரணமானவன் இல்லை என்பதை சுக்கிராச்சாரிக்கு சொன்னது, மகாபலியினை எச்சரித்தார் சுக்கிராச்சாரி.
ஆனால் தானம் கொடுக்கும் ஆசையில் , தன் யாகம் வெல்லும் ஆசையில் இருந்த மகாபலி அவரை மீறினான்.
ஆம், குருவினை மீறினால் நீ அழிவாய் என முனிவன் சாபமிட்டது அந்த இடத்தில் வேலை காட்ட ஆரம்பித்தது, கமண்டலத்தை எடுத்து 3 அடி நிலம் தாரைவார்க்க முனைந்தான் மகாபலி.
ஆனால் அப்பொழுதும் வண்டாக மாறி கமண்டல துளையினை அடைத்து தடுத்தார் சுக்கிராச்சாரி, ஒரு குச்சி வைத்து வண்டை தள்ளி நீரை வார்த்து 3 அடி உமக்கு சொந்தம் என வாக்களித்தான் மகாபலி.
அவன் வாக்களித்து முடிக்கவும் அந்த 3 அடி குள்ள வாமணன் 3 உலகுக்கும் விஸ்வரூபமாய் எழுந்து நின்றார், ஒரு காலால் விண்ணை அளந்தார் இன்னொரு காலால் பூமியினை அளந்தார், இன்னொரு கால் வைக்க எங்கே இடம் என மகாபலியிடம் கேட்டார்.
மகாபலிக்கு எல்லாம் புரிந்து போயிற்று, பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்த பகவான் இப்பொழுது வாமணனாக வந்து விஸ்வரூபம் காட்டி தன் முன் தன்னை பலி கேட்கின்றார் என்பது புரிந்தது.
பகவானே ஒரு காலை என் தலையில் வையுங்கள் என இடம் கொடுத்தான் பலி, அவனை பாதாளத்தில் அழுத்தும் முன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டார் பகவான். இந்நாடும் மக்களும் வளமாக வாழவேண்டும், ஆவணிமாதம் ஓண நட்சத்திரத்தின்பொழுது நான் இங்கு வந்து அவர்கள் ஆனந்தமாக வாழ்வதை காணவேண்டும் என கேட்டபடி பகவானின் பாதத்தை தாங்கினான் மகாபலி.
அப்படியே ஆகட்டும் என சொல்லி அவன் தலைமேல் கால்வைத்து அழுத்தினார் விஷ்ணு, அவன் பாதாளத்தில் இறங்கினான். பகவான் வாக்களித்தபடி வருடத்தின் ஆவணிமாதம் திருவோணம் அன்று அவன் வருவான் , தன் மக்களை பார்க்க வருவான். அதைத்தான் திருவோண பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றார்கள்.
மகாபலியின் ஆணவத்தை பகவான் அடக்கிய இடத்தில் வாமணனுக்கு பரசுராமர் ஒரு கோவில் எழுப்பினார், இன்றும் அந்த கோவில் உண்டு, திருகாட்கரை காட்கரையப்பன் எனும் பெயரில் கேரளாவில் உண்டு. 108 வைணவ தலங்களில் அது 68ம் தலமாக போற்றபடுகின்றது, அங்கு மகாபலி தீர்த்தமெடுத்த கபில தீர்த்ட்தம் இன்றும் உண்டு.
திருவோணம் ஒரு காலத்தில் இந்தியா முழுக்க கொண்டாடபடும் பண்டிகையாக இருந்தது, பின் தென்னகத்துக்கு சுருங்கிற்று, பின் கேரளாவுக்கு மட்டும் சேர்ந்தது.
கேரளா பெரும்பாலும் அடுத்த இனத்தின் ஆட்சியில் சிக்கவில்லை என்பதும், வாமணன் விஸ்வரூபமெடுத்த அந்த இடம் இன்று திருகாட்கரை ஆலயமாக கொச்சி அருகே நிற்பதும், அங்கு வாமண சிலை நிற்பதும் அந்த பண்டிகை தொடர்ந்துவர ஒரு காரணம்,
மற்றபடி எல்லா மக்களும் கொண்டாட வேண்டிய பண்டிகை ஓணம்.
மகாபலியின் வாழ்வும் வீழ்ச்சியும் சொல்வது என்ன?
சிவனுக்கு செய்யும் தொண்டு வீணாகாது, இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் அடுத்த பிறவியில் அது மாபெரும் கிரீடமாய் சிவனால் கொடுக்கபடும்.
ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் சேருமிடம் மிக சரியாக இருக்க வேண்டும், சேர கூடாதவர்களை சேர்த்து அடாதன செய்தான் மகாபலி, அதர்மம் அவனால் வளர்ந்தது அதற்கு துணை சென்றான், ஒரு காலமும் அதர்மக்காரர் பக்கம் இருக்கவே கூடாது இருந்தால் அழிவு நிச்சயம்.
ஆம் அகங்காரிகள் செய்யும் வெல்லமுடியா போர் அல்ல, அவர்களின் தானமே அவர்களை அழித்துவிடும். தர்மம் அந்த தானம் மூலம் அவர்களை அழிக்கும், பகவானின் ஏற்பாடு இது.
முழு பலமானவன் என யாருமில்லை, ஒவ்வொரு பலசாலிக்கும் ஒரு பலவீனம் இருக்கும், தர்மம் அதில் தன்னை மீட்டெடுக்கும். அடுத்து குருவின் கட்டளையினை மீறுதல் பெரும் பாவம், எக்காரணம் கொண்டு குருவினை மீறல் கூடாது மீறினால் அழிவு.
ஆணவம் ஆசையினை கொடுக்கும் அந்த ஆசை எல்லை மீறி சென்று கொண்டே இருக்கும், பகவானின் காலடியினை சரணடைந்து அதை தலையால் ஏற்றாலே அகங்காரம் ஒழிந்து, ஞானம் பிறக்கும்
மகாபலியின் அகங்காரம் பகவான் பாதத்தினை தாங்கியதால் உடைந்து அழிந்தது. இந்த மகாபலியின் வாழ்வு கர்ணனின் வாழ்வினை சார்ந்தது, இருவருமே நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் சேரகூடா இடம் சேர்ந்து அழிந்தார்கள்.
இருவருமே தானத்துக்கு வாக்கு கொடுத்து தானத்தால் அழிந்தார்கள். இதனால்தான் யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை பகவான் இவர்களுக்கு அருளினார். இருவர் மேலும் அவருக்கு இரக்கம் இருந்தது ஆனால் அதர்மம் பக்கம் இருக்கும் அவர்களை அகற்றாமலும் முடியாது.
இதனால் அவர்களின் கொடைகளுக்கும் தான தர்மங்களுக்கும் ஏற்ப தன் தரிசனம் காட்டி தன்னோடு சேர்த்தும் கொண்டார். வாமண அவதாரம் என்பதும் மகாபலி வதம் என்பதும் என்றோ நடந்துவிட்ட ஒன்றல்ல, ஓணம் பண்டிகையோடு மட்டும் நினைவுக்கு வரும் ஒன்றல்ல.
ஒவ்வொருவன் மனமும் அனுதினமும் நன்மைக்கும் தீமைக்கும் இடையே அப்போராட்டத்தை ஒவ்வொரு நொடியும் நிகழ்த்துகின்றது. அதில் பல நேரம் அகங்காரம், ஆணவம்,ஆசை போன்றவையே ஆள்கின்றன. அதில் மனிதன் மிருகமாகின்றான், அசுரகுணம் கொண்டு மற்ற எல்லோரையும் வதைக்கின்றான்.
இந்த சுக்கிராச்சாரி என்பது மனதின் மாயை, இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி மாயை செய்யும் காட்சி அது. அந்த பேராசை மாயையே மனதை தூண்டி மனதின் தீய பக்கத்தை தூண்டி மண், பொன், பெண், பணம், புகழ் என அவனுக்கு வழிகாட்டி அவனை வீழ்த்துகின்றது.
ஆனால் எல்லா மனிதனுக்குள்ளும் மனசாட்சி உண்டு அல்லது ஏதோ ஒரு நல்ல குணம் சிறிதளவு தர்மம் உறங்கி கொண்டிருக்கும். அவன் அதில் மாயையினை மீறி, அதாவது சுக்காராச்சாரி வண்டாக மாறி தடுத்தும் அதை தாண்டி வாமணனை நெருங்கிய மகாபலி போல பகவானை சரண்டைந்தால் போதும். அந்த மிக சிறிய தர்ம குணம், நல்ல குணம் விஸ்வரூபமாய் நம் மனதை ஆக்கிரமிக்கும் அதில் அந்த ஆசை, கோபம், காமம், மயக்கம் போன்ற மாயைகள் விலகி மனம் கோவிலாகும், ஆத்மா புனிதமாகும்.
மாயையினை வென்ற மனம் கடவுளாகும், அந்த மனிதனை ஒவ்வொருவரும் கோலமிட்டு வரவேற்பர், பொன்னூஞ்சலில் ஆட்டுவர். ஆம், மாயையினை வென்றவனை, இறைவனின் பாதம் சரண்டைந்தவனை, அகந்தையினை அழித்தவனை உலகம் கொண்டாடும். இந்த தத்துவத்தைத்தான் மகாபலியின் ஓணம் போதிக்கின்றது. இது இந்திய தத்துவ விழா, ஞான மரபின் கொண்டாட்ட விழா, பகவான் நம் ஒவ்வொருவரையும் அகந்தை அழித்து காக்க வேண்டும் என வேண்ட வேண்டிய விழா.
இந்த விழா ஒவ்வொருவரும் மாயையினை வெல்ல வேண்டும் என்றும், மனிதனுக்கு அரசமுடி தேவையில்லை அவன் தலையில் சுமக்க வேண்டியது பகவானின் பாதங்களையே என்பதை சொல்லும் விழா.
மகாபலியின் வாழ்வினை கர்ணன் வாழ்வில் காணலாம், நாயன்மாரில் கூற்றுவ நாயனாரில் காணலாம். அகந்தை ஒழிப்பே ஞானத்தின் தொடக்கம், தெளிவின் முதல் படி, ஆத்மாவின் தெளிவு என்பதை சொல்லும் காட்சிகள் இவை ஆம், மலையாளிகள் மட்டுமல்ல இத்தேசத்தின் தெய்வீக ஞானமரபினை, இந்த மண் சொல்லிய மிகபெரிய தத்துவத்தை, அராஜகம் அத்துமீறினால் தெய்வம் இறங்கிவந்து அதை சரிசெய்யும் எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் இந்த விழாவினை ஒவ்வொரு இந்தியனும் கொண்டாடலாம்.