கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் புராணக் கதை!
நாகப்பட்டினம் மாவட்டம் கஞ்சாநகரம் பகுதியில் உள்ளது காத்ர சுந்தரேஸ்வரர் கோயில். சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இத்தல தாயார் துங்கபாலஸ்தானம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கார்த்திகைப் பெண்கள் 6 பேரும் இங்கு அவதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
கோயில் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பிரம்மா, துர்கா தேவி, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதியே உள்ளது.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:
திறமை மிக்கவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்கள். கலைகளை ஆர்வமுடன் கற்கும் குணம் கொண்டவர்கள். பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் இவர்கள், எப்போதும் பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பு கொண்டிருப்பார்கள். கல்வியில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். எனினும், வாழ்க்கைக்கு தேவையான தகுதிகள் பெற்றிருப்பார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனான காத்ர சுந்தரேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். சொத்து தகராறு மற்றும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்கிறார்கள். பெண்கள் தங்களுக்கு திருமணம் நடக்க சுமங்கலி பூஜை செய்கின்றனர்.
தல பெருமை:
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ நாட்களிலோ அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. கார்த்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்த திருமணத் தடை உள்ள பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தலத்திலுள்ள துங்கபாலஸ்தானம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேதம் ஓதும் கிளி:
மதுரை மீனாட்சி அம்மன் கையில் கிளி இருப்பதைப் போன்று இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். சிவபெருமானே வேத சக்தியாக இந்த கிளி வடிவில் அம்மனின் இடது தோளில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இது வேதம் ஓதும் கிளி என்றும் சொல்லப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்கள், இந்த நட்சத்திர நாளிலும், வெள்ளியன்றும் இந்த வேதம் ஓதும் கிளியை தரிசனம் செய்தால் சிறப்பான மணவாழ்க்கை அமையும். இங்கு, மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது.
வரலாறு:
முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் பத்மாசூரன் மற்றும் சிங்கமுகன் உள்ளிட்ட அசுர்ர்களால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். முனிவர்கள் மற்றும் தேவர்களை காப்பாற்ற பார்வதி தேவி சிவபெருமானிடம் வேண்டுகோள் வைத்தார்.
அப்போது சிவபெருமான் காத்ரஜோதி எனப்படும் நெருப்பு வடிவம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அம்மனின் வேண்டுதல் காரணமாக சிவனின் தவம் கலைந்து போக காத்ர சுந்தரேஸ்வரர் என்னும் பெயர் கொண்டு தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து 6 ஜோதிகள் வந்தன. அந்த 6 ஜோதிகள் ஒன்றிணைந்து கார்த்திகை பெண்களாயின.
சிவபெருமானிடமிருந்த வந்த 6 ஜோதிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இந்த ஊர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் இந்த ஊரானது கஞ்சாநகரம் (பொன் நகரம்) என்றானது. தான் தோன்ற காரணமாக இருந்த இந்த தலத்தில் தினந்தோறும் கார்த்திகேயன் வழிபடுவதாக ஐதீகம். ஆதலால், இந்த கோயில் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமாக கருதப்படுகிறது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறு ஜோதிகளை உருவாக்கும் சக்தி கொண்டவர் என்று பொருள்படும்.