கணவனுக்கு செய்யும் சேவையே சிவசேவை – புராணக் கதைகள்!

91

கணவனுக்கு செய்யும் சேவையே சிவசேவை – புராணக் கதைகள்!

சிவகாசி சிவனின் தீவிர பக்தை. அவளது கணவன் சிதம்பரம். விவசாயியான சிதம்பரம் வயலில் வேலை செய்துவிட்டு மாலையில் களைப்புடன் வீடு திரும்புவான். அப்போது, வீட்டு கதவை சாற்றிவிட்டு அவள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்றிருப்பாள்.

சிதம்பரத்திற்கு கோபமாக வரும். கணவன் வரும் வேலையில் வீட்டில் இருந்தோமா, குடிக்க ஏதாவது கொடுத்தோமா என்றில்லாமல் இப்படி செய்கிறாளே என்று எண்ணி வருத்தப்படுவான். இறைவன், கணவனை கவனிக்காமல் கோயிலுக்கு வா என்றா சொன்னார் என்று எண்ணிக் கொள்வான். ஆனால், மனைவியை கண்டிக்கும் தைரியம் மட்டும் அவனுக்கு வரவே இல்லை. ஒருவேளை கண்டித்தால் அதனால், ஏதேனும் சண்டை வந்துவிடுமோ என்று எண்ணிக் கொள்வான்.

ஆகையால், அவனாகவே எல்லா வேலைகளையும் முடித்து, வீட்டில் இருக்கும் சாப்பாட்டை போட்டு சாப்பிட்டுக் கொள்வான். ஒரு கட்டத்தில் சிவன் மீது கோபம் வந்துவிட்டது. சிவன் என்று ஒருவன் இருப்பதால் தானே மனைவி கோயில் கோயில் என்று சுற்றுகிறாள். மறுநாள், வயலுக்கு செல்லும் வழியில் சிவன் கோயில் முன்பு தனது வண்டியை நிறுத்தினான். அங்கு சிவபார்வதி சிலையாக காட்சி அளித்தனர்.

சிவபெருமானே! நீ மட்டும் உனது மனைவியை உன்னருகிலேயே வைத்துக் கொள்வாய், என் பொண்டாட்டி என்னை விட்டு விட்டு உன்னை பாக்க வந்துடுறா, இதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா? பார்வதியே! உன்னை கருணையுள்ள தாய் என்று சொல்றாங்காளே! நீயாச்சும் எடுத்துச் சொல்லக் கூடாதா, உன் புருஷன்கிட்டே என்று புலம்பினான்.

அதன் பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் சென்றதும், பார்வதி சிவனிடம் அந்த விவசாயி சொல்வது நியாயம் தானே! பக்தை சிவகாசி இங்கே வந்து விட்டால் சிதம்பரம் வேலை முடிந்து வந்ததும் அவனுக்கு யார் உதவிகள் செய்வது? வயலிலும், வெயிலிலும் வேலை செய்து விட்டு அயர்ந்த களைப்பில் வீட்டுக்கு சென்றால் நிம்மதியில்லை. அவனுக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்களேன் என்றாள்.

சிவன் சிரித்துக் கொண்டே நடப்பதைக் கவனி என்று இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தார். மறுநாள், சிவகாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், கடும் காற்றடித்தது. காற்று மணலை வாரி வீசியதால், அவளால் நடக்க முடியவில்லை. மேகங்கள் சூழ, பெரும் மழையும் வந்து விட்டது. சூறாவளியில், ஒரு மரக்கிளை ஒடிந்து அவள் மேல் விழுந்தது. வசமாகச் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.

அப்போது, வீடு திரும்பிக் கொண்டிருந்த சிதம்பரம், மனைவியைத் தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் ஓடினான். கை எலும்பு முறிந்து விட்டது. ரத்தமும் வெளியேறி விட்டதால், அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பினார். அன்று முதல், ஒருவாரம் வயலுக்கே போகாமல், மனைவியின் அருகில் இருந்து அவளுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது முதல் எல்லாமே பார்த்துக் கொண்டான் சிதம்பரம்.

அப்போது, அவள் மனதில் உதித்த எண்ணம் இதுதான். இவர் வேலை முடிந்து வரும் வேளையில், ஒருநாள் கூட நான் வீட்டில் இருந்ததில்லை. இவரோ, தன் வேலையைப் போட்டு விட்டு, எனக்காக இவ்வளவு சேவை செய்கிறார். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்! கணவனுக்கு செய்யும் சேவையே சிவசேவை.

கோயிலில் இருந்த சிவனும் பார்வதியும், அவளை அங்கிருந்தபடியே ஆசிர்வதித்தனர்.