கண்ணப்ப நாயனார் வரலாறு!

78

கண்ணப்ப நாயனார் வரலாறு!

நாயன்மார்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. ஆனால் திண்ணப்பன் கண்ணப்பன் ஆகியது, ஈசனின் மற்றும் ஒரு திருவிளையாடல்.

கண்டதும் காதல் கன்னியரைக் கண்டதும் தோன்றுவுதுண்டு. கடவுளிடம் வருமோ காதல்? ஆம் என்று சொன்ன ஆண்டாள் , மூன்றடி அளந்த பெருமானின் திருவடி அடைந்தாள். மாயவன் மலரவன் ஆகி மங்கையை மயக்கியது வியப்பில்லை. இயற்கையான நிகழ்வு.

ஆனால் இங்கு, பிறந்த நாள் முதல், அடியார்க்கு நல்லானை(ஈசன்) அறியாதவனாக திண்ணப்பன் நமக்கு அறிமுகமாகின்றான். பொன்மேனி உடையவனை அறியாதவனாக பொழுதைக் கழிகின்றான்.

ஆனால் என்றுமே அறிந்திராத மகேசனை, மலை மேல் பார்த்த உடன், பிரமை கொண்டு, உணர்விழந்து போகின்றான். உமையாள் பாகன்(ஈசன்) அவன் உருதி எங்கும் உறைகிறார். சன்னிதி விட்டு வெளியே வந்ததும் சலனப்படும் என்னை எண்ணிப் பார்க்கின்றேன்.

இறை இங்கு உருவசிலை கொண்டு நிற்கிறது. உருவம் கொண்ட சிலை, உயிர் துடிப்பாய் உலவுவது திண்ணப்பனக்கு தெளிவாய் தெரிகிறது. காளத்தியப்பனைக் (ஈசன்) கட்டி தழுவிக் கொள்கின்றான். என்ன சொல்லி அழைப்பது அந்த தழுவலை பற்றி. சேய்யை தழுவும் தாயா? கணவனை தழுவும் கற்புகரிசியா? கரையை தழுவும் கடலா? இறைக்கும் பசிக்கும் என்று எண்ணுகின்றான். என்னே ஒரு எண்ணம்?.

இங்கு இறை சைவமா அசைவமா ? கேள்வி மட்டும் நமக்கு சொந்தம்!! திண்ணபனக்கு அதை பற்றி தினையளவும் கேள்வி இல்லை. பன்றி கறியை, பக்குவமாய் அறுத்து, சுவையான பாகம் எது என்று ருசி பாத்து, ருசித்த பாகத்தை ஈசன்கு படையல் ஆக்கினான். உலகத்திற்கே படி அளப்பவன் ஈசன், ஆனால் ஒருவேளை உணவுக்கு ஈசன் படும் பாட்டை ஒரு கணம் எண்ணி பார்க்கின்றேன் அப்பப்பா!!

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும், அனைவரும் அமுதும் உண்ண, தான் மட்டும் நஞ்சுண்டு தீரு நீலகண்டன் ஆனதும், பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சாடனர் (ஈசன்) ஆனதும், பிரமனை தண்டித்து கையில் கபாலம் ஏந்தி, அகோர பசி கொண்டு அலைந்து கபாலிஸ்வரர் ஆனதும், என் நினைவில் வந்து நிரடுகிறது.

மீண்டும் எச்சில் பண்டம் ஏழைபாகத்தானின் (ஈசன்) உணவு ஆகிறது. மேலே தொடர்கின்றேன். அகத்தை சுத்தமாக்கும், அகிலங்கடந்தான் (ஈசன்) திருமேனி அழுக்காய் இருப்பதாய் எண்ணி திண்ணப்பன் திகைக்கிறான். கையிலோ பன்னிக்கறி, ஆற்றில் நீர் அள்ளி வர பாத்திரம் எதுவுமில்லை. வாயில் நீரை அள்ளுகின்றான் ஆற்றில் இருந்து.

அகிலத்தையே புனிதமாக்கும் கங்கையை தன் சிரசில் சுமப்பவன், தலை மீது, தன் உமிழ் நீரை உமிழ்கின்றான். உமிழ்நீர் அடல்விடைப்பாகனின் (ஈசன்) அபிஷேக நீர் ஆகுகிறது. இறைவனை தனித்து உண்ண விட்டு, வெளி நின்று காவல் காக்கின்றான். யார்க்கு யார் காவல்? புரியவில்லை எனக்கு? எமனையே சம்காரம் செய்த எரிதழல் மேனியனுக்கு (ஈசன்) எவர் காவல்?. காதல் இங்கு காவலாய் கடமை ஆற்றுகிறது. நிற்க.

தன்னை காக்கும் படி வேண்டி, தன் வேண்டுகோளை நிறைவேற்றி தரும் இறைவனையும், அவன் திருகோவிலுக்கு தீங்கு நிகழும்போதும், அவனை இகழும் போதும், வாய் பொத்தி மௌனம் சாதிக்கும் என் மத மக்களை எண்ணி பார்க்கின்றேன். நன்றி மறந்த மக்கள்.

இன்னும் விழித்து கொள்ளாத என் மக்களை மறந்து விட்டு , திண்ணபனை பின் தொடர்கின்றேன். இறைக்கு இதயம் நனைகிறது. காதலை காட்டும் காவலனம் , திண்ணபனிடம் திருவிளையாடலை தொடங்குகின்றான் ஈசன். இறை அசைகிறது. திண்ணபன்னின் திடம் கண்டு, இறைக்கு கண்ணில் கண்ணிர் உதிரமாய் பெருகுகிறது. இறைக்கும் வருமோ இரத்தக் கண்ணீர்!!

திகைக்கும் திண்ணப்பன், துடி துடித்துப் போகின்றான். திசை எங்கும் நோக்கின்றான். யார்/எது செய்தது என்று அலைகின்றான். கோவத்தில் சிவந்த அவன் கண்களில் இருந்து கண்ணிர் கரைகிறது. பச்சிலை கொண்டு வைத்தியம் செய்கின்றான். ஆனால் அவன் துடிப்பை கண்டு, இன்னும் இறைக்கு இருமடங்காய் ரத்தம் வழிகிறது. திண்ணப்பன் ஆடிப் போகின்றான்.

எடுத்தான் அம்பை, பெயர்த்தான் தன் ஒரு கண்ணை வைத்தான் இறை கண்ணில் இறையும் ஆடிப் போனது. கண்ணுக்கு கண்ணா. இது என்ன காதல், இது என்ன பக்தி. ரத்தம் நிற்கிறது. ஆனந்த கூத்தாடுக்கின்றான் திண்ணப்பன். நமக்கோ உள்ளம் உறைகிறது. மேலே படிக்க முடியாமல் கண்ணீர் முட்டுகிறது. இருந்தும் தொடர்கின்றேன்.

திண்ணப்பனின் , பெயர்த்து எடுத்த கண்ணில் உதிரம் உமிழ்கிறது. பக்தன் கண்ணில் உதிரம் பெருக, இறை உள்ளுக்குள் உடைகிறது. மீண்டும் மறு கண்ணில் இருந்து ரத்தம் வழிகிறது இறைக்கு.

திண்ணப்பன் தடுமாறுகின்றான். ஆனால் ஆனந்தம் அவனுக்கு, ஏன் எனில் வைத்தியநாதற்கு அவனிடம் வைத்தியம் உள்ளதே. இருக்கும் தன் ஒரு கண்ணையும் இறைவனுக்கு பொருத்தி விடலாம், ஆனால் பெயர்த்த எடுத்த பிறகு, கண் தெரியாமல் போனால், இறைவனுக்கு எவ்வாறு பொருத்துவது. யோசிக்கின்றான் ஒரு நிமிடம்.

மறு நிமிடம் தன் கால் பெருவிரலை எடுத்து, இறையின் ரத்தம் வரும் கண்ணில் வைக்கின்றான் அடையாளத்திற்கு. எவர் கடைக்கண் பார்வை இம்மைக்கும், மறுமைக்கும் நம்மை நற்கதி அடைய செய்யுமோ, அவர் கண்ணில், திண்ணப்பனின் கால், காதல் கண்ணை மறைப்பது என்பது இதுதானா? திண்ணப்பன் தன் கண்ணை பெயர்க்க முயல, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் இறை வெடித்துக் கிளம்புகிறது.

கையை பற்றி, நில்லு கண்ணப்பா என்று இறை சொல்ல, திண்ணப்பன் கண்ணப்பன் ஆகுகின்றான். சத்தியமாக இது எவர்க்கும் சாத்தியமில்லை. எத்தனை முறை இதை படித்தாலும், உள்ளம் நடுங்குகிறது. கண்ணப்பனைப் போல் இறைவனை காதலித்தவர் உலகில் உண்டோ?

பார்த்த உடன் காதல், காதலுடன் சேர்த்த பக்தி வருமோ நமக்கு?. இறையை பார்ப்பதும், அதனை ஆலிங்கனம் செய்வதும், இறை உடனே ஓடி வருவதும் கண்ணபனக்கு மட்டுமே. கடவுளை காதலிக்க கற்று தருவது இங்கு கண்ணப்பன் மட்டுமே. மகளிர் மேல் எனக்கு இருந்த மயக்கத்தை மாற்றியது கண்ணப்பன் சரித்திரமே.

ஈசன் மேல் நான் கொண்டு இருப்பதாக எண்ணும் பக்தி, சில சமயம் என் தலைக்கு மேல் ஏறும் போது, கண்ணப்பனார் கதை என்னை கலைத்துப் போட்டு விடும்.

கண்ணப்ப நாயனார் காலடி போற்றி!