கதிர் நரசிங்க பெருமாள் கோயில் – புராணக் கதைகள்!

262

கதிர் நரசிங்க பெருமாள் கோயில் – புராணக் கதைகள்!

கரூர் மாவட்டம் பாளையம் என்ற ஊரில் உள்ள கோயில் கதிர் நரசிங்க பெருமாள் கோயில். இந்த கோயிலில் கதிர் நரசிங்க பெருமாள் மூலவராகவும், உற்சவராகவும் காட்சி தருகிறார். கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கோயிலில் வில்வ மரமே தல விருட்சமாக திகழ்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் மகாபாரத போருக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுடன் வந்து வழிபட்டதாக தகவல்கள் உள்ளன. நாயக்க மன்னர்களின் முற்கால திருப்பணி நடைபெற்ற கோயில் ஆகும்.

கோர்ட் வழக்கு உள்ளவர்கள், ராகு கேது தோஷம் நீங்க இங்கு வந்து மனம் உருகி வழிபட்டால் வெற்றி நிச்சயம். மேலும், தனி சன்னதியில் ஈசான மூலையில் காட்சி தரும் சேஷத்திர பாலகரான ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட மனநோய் நீங்கும். பிரதி மாதம் சுவாதி நட்சத்திர நாளிலும் சனிக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சத்ரு ஜெயம் உண்டாகும்.

பொதுவாக எல்லோரது வாழ்விலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. எல்லா துன்பத்தையும் நீக்கி ஒரே வரியில் கேட்டதை தரும் மந்திரம் இது. வீட்டில் லட்சுமி நரசிம்மர் படம் வைத்து பசும்பாலுடன் சிறிது கற்கண்டு பொடி கலந்து படைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே என்ற இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் 48 தடவை சொல்லி வந்தால், நினைத்தது கை கூடும். தேவர் மறி என்ற புராண பெயருடன் இந்த தலம் முதலில் அழைக்கப்பட்டு அதன் பிறகு பாளையம் என்றானது.

கிழக்கு நோக்கிய நிலையில் சுமார் 4 அடியுடன் உள்ள கதிர் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் இது. மகாலட்சுமி கமலவல்லி என்னும் திருநாமத்துடன் தனி சன்னதியில் அமர்ந்து கேட்ட செல்வத்தை தரும் செல்ல தாயாராக வீற்றிருக்கிறாள். தனது பக்தன் சொன்ன கதையை உண்மையாக்குவதற்காக தூணிலிருந்து ஸ்ரீ நரசிம்மராக அவதாரம் செய்து இரண்யன் என்ற அரக்கனை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.

பெருமாளின் உக்கிரத்தை தணிக்க தேவர்கள் இந்த இட்த்தில் தீர்த்தத்தை உருவாக்கி அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்தார்கள். அதனால், சாந்தம் அடைந்த பெருமாள் தர்ம விதியின் ஏற்பட்ட தோஷம் நீங்கி சாந்த மூர்த்தியாக 4 திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் பின் கைகளில் தாங்கி வலது திருக்கை அபய அஸ்தமாகவும் இடது திருக்கை அபயம் தரும் ஆ-ஹ்வான முத்திரையுடன் வீராசனம் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.