கல்யாணத்திற்கு சாட்சியாக நின்ற சாட்சிநாதேஸ்வரர் – புராணக் கதை

194

கல்யாணத்திற்கு சாட்சியாக நின்ற சாட்சிநாதேஸ்வரர் – புராணக் கதைகள்!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியம் என்ற ஊரில் உள்ள கோயில் தான் சாட்சிநாதேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சாட்சிநாதேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் கரும்பன்ன சொல்லி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தில் 10 நாட்கள், சிவராத்திரி, மார்கழி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி நாளில் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது என்று சொல்லப்படுகிறது. மற்ற நாட்களில் திருமுழுக்கு இல்லை. இந்தக் கோயிலானது மதுரை திருஞானசம்பந்தரின் ஆதீனத்திற்கு சொந்தமானது.

திருமண வரன் வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

அகத்தியர், சனகாதி நால்வர், விசுவாமித்திரர், பிரமன் ஆகியோர் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளனர். அரித்துவசன் என்ற அரசனுக்கு துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம் இது. கோயிலுக்கு விறகு கொண்டு வந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாக காட்சி கொடுத்துள்ளார். கோயிலுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார். கோயிலின் முதல் பிரகாரத்தில் அகத்தியர், சனகாதி நால்வர், விசுவாமித்திரர், பிரமன், புலஸ்தியர், சனகர், சனந்தனர் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

கோயிலின் 2ஆவது பிரகாரத்தில் அம்பாள் சன்னதி உள்ளது. குளத்திற்கு தென்கரையில் தெட்சிணாமூர்த்தி கோயில் இருக்கிறது. இதற்கு மேலாக சட்டை நாதர் சன்னதியும் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள பிரளயங்காத்த பிள்ளையார் வெண்ணிற திருமேனியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் (புறம்பு – அயம்) திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது. இந்த ஊருக்கு கல்யாண மாநகர், புன்னாகவனம் ஆகிய புராணப் பெயர்களும் உண்டு. பிரளய வெள்ளம் வந்த போது புறம்பாய் இருந்தமையால் புறம்பயம் என்று பெயர். இரத்தினவல்லி என்ற ஒரு வணிக குலத்து கன்னிப் பெண் ஒருவள் இருந்தாள். அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவள், தனக்கென்று நிச்சயிக்கப்பட்டிருந்த வருங்கால கணவருடன் இந்த ஊருக்கு வந்தாள். அப்போது, அவளது வருங்கால கணவனை பாம்பு கடித்து இறந்துவிட்டான். இதனால், மனம் வருந்தினாள்.

இதையடுத்து, அந்த ஊருக்கு திருஞானசம்பந்தர் வந்திருந்தார். அவர், நடந்தவற்றை அறிந்து கொண்டு, திருப்பதிகம் பாடி இரத்தினவல்லியின் வருங்கால கணவனை எழுப்பியருளி அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்கு இறைவன் சான்றாக நின்று அருளினார். இரத்தினவல்லியின் திருமணத்திற்கு சான்றாக இறைவன் இருந்ததால், இறைவனுக்கு சாட்சி நாதர் என்ற பெயர் வந்தது. இந்த திருமணத்திற்கு ஒரு வன்னிமரமும் சான்றாக சொல்லப்படுகிறது. அந்த வன்னிமரம் கோயிலின் 2ஆவது பிரகாரத்தில் உள்ளது. இறைவன் சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், தல புராணத்திலும் வருகிறது.