காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோயில் – புராணக் கதைகள்!

133

காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோயில் – புராணக் கதைகள்!

வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் என்ற ஊரில் உள்ள கோயில் சுப்பிரமணியசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுப்பிரமணியர் மூலவராக காட்சி தருகிறார். சண்முகர் உற்சவராக திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மாசியில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் உள்ள மூலவரது மறுபெயர் காங்கேயன். மூலஸ்தானத்தில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை உடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அருணகிரிநாதரை தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு முருகப் பெருமானை வழிபடுகின்றனர். இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டுள்ளது. விநாயகர், காசி விஸ்வநாதர், துர்க்கை, விசாலாட்சி, சூரியன், நவவீரர்கள், நால்வர், சரஸ்வதி, லட்சுமி, நாகர், வீரபத்திரர், பைரவர் என்று பரிகார தெய்வங்கள் இருக்கின்றன. காங்கேயனாகிய முருகன் அருளும் தலம் என்பதால், இந்த ஊர் காங்கேய நல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

வாரியரின் தந்தை மலையதாசர், முருகனின் தீவிர பக்தர். ஆதலால் முருகப் பெருமான் கோயிலுக்கு கோபுரம் கட்ட விரும்பினார். இதற்காக திருவண்ணாமலை சென்ற அவர், திருப்புகழ் சுவாமி என்று அழைக்கப்பட்ட லோகநாதரை சந்தித்தார். அவரிடம் கோபுரம் கட்ட உதவும்படி கேட்டார். ஆனால், அவரோ அடுத்தவருடம் வரும்படி கூறிவிட்டார். இதையடுத்து, மறுவருடமும் அவரை சந்திக்க சென்றார்.

அப்போது திருப்புகழ் சுவாமி, விபூதியும், ஒரு ரூபாயும் கொடுத்து கோபுரத்திற்கான திருப்பணிகளை தொடங்கும்படி கூறினார். மலையதாசர் திருப்பணியை தொடங்க கோயில் கோபுரம் விரைவில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்கு எதிரில் வாரியர் அதிஷ்டானம் இருக்கிறது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை அணிவித்து தயிர் சாதம் நிவேதனம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை வருடப்பிறப்பின் போது முருகப் பெருமான் வடக்கு கோபுரத்தின் கீழ் காட்சி தருகிறார். வடக்குப் பகுதி குபேர திசை என்பதால், அன்று வடதிசை நோக்கி எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை வழிபட வருடம் முழுவதும் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் முருகப் பெருமான் வடக்கு கோபுரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசியில் கந்த சஷ்டி விழா 8 நாட்கள் நடக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த நாள் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. அருணகிரியார் இந்தக் கோயிலுக்கு வந்த போது சுவாமிக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்து பூஜித்து வழிபட்டார்.

அப்போது ஆறு அடியார்கள் அங்கு வந்தனர். அருணியார் முருகப் பெருமானுக்கு படைத்த தயிர் சாதத்தை அவர்களுக்கும் படைத்தார். முருகப் பெருமானே இவ்வாறு 6 அடியார்களாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தக் கோயிலில் முருகப் பெருமானுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும், ஆறு அடியார்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

தேவர்களுக்கு அசுரர்களால் பாதிப்பு ஏற்படவே தங்களை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து 6 குழந்தைகள் உருவாகி கங்கையில் இருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு, பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள். முருகன் 6 முகங்களுடன் காட்சி தந்தார்.

கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு காங்கேயன் என்று பெயர் ஏற்பட்டது. இந்தப் பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார்.