கிருபாம்பிகை சமேத கௌதமயிஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

208

கிருபாம்பிகை சமேத கௌதமயிஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

வேலூர் மாவட்டம் காரை என்ற ஊரில் உள்ள கோயில் கவுதமேஸ்வரர் (கௌதமயிஸ்வரர்) திருக்கோயில். இந்தக் கோயிலில் கவுதமேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார், கிருபாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையில் சரபேஸ்வரர், விநாயகருக்கு விசேஷ அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. சிவபெருமான், கௌதம மகிரிஷிக்கு ஒரு பௌர்ணமி நாளன்று காட்சி கொடுத்தார். இதன் காரணமாக பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு 7 வகையான அபிஷேகமும், கவுதமருக்கு பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது.

வேலூர் பகுதியைச் சுற்றிலும் 7 சிவன் கோயில்கள் உள்ளன. சிவராத்திரி நாளின் போது இந்த 7 சிவன் கோயிலையும் தரிசனம் செய்வது சிறப்பு. இவற்றில் நோய் தீர்ப்பவராக அருளும் இந்த சிவனை வைத்தியர் என்று அழைக்கின்றனர். இது சிறிய கோயில் என்பதால், கோபுரம், கொடிமரம் என்று எதுவும் கிடையாது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் இருக்கிறார். சுவாமி விமானத்தில் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணரின் சிற்பங்கள் மட்டுமே உள்ளன.

கவுதமேஸ்வரர் இங்கு தீராத நோய்களை தீர்த்து வைப்பவராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆகையால் வைத்தியர் என்று அழைக்கப்படுகிறார். தீராத நோய் உள்ளவர்கள் கவுதமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வில்வ இலை மாலை அணிவித்து சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் கொண்டு கலவையை படைத்து வழிபடுகின்றனர். இந்த மருந்தையே பிரசாதமாக பெற்று பக்தர்கள் சாப்பிடுகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும் வஸ்திரம் சாற்றியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சிவன் சன்னதி முன்பாகவுள்ள மண்டபத்தில் அம்பாள் கிருபாம்பிகை காட்சி தருகிறாள். ஒரே சமயத்தில் கவுதமேஸ்சரர், கிருபாம்பிகை ஆகிய இருவரையும் தரிசிக்கும் வகையில் கோயில் அமைப்பு உள்ளது. கோயில் முகப்பில் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் உள்ளார்.

தனி சன்னதியில் சரபேஸ்வரர் உக்கிர மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரை குளிர்விக்கவே அருகில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். பைரவருக்கும் சன்னதி இருக்கிறது. உற்சவர் அம்பிகையுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். பிரதோஷ வேளையின் போது இவரை தரிசிப்பது மிகவும் சிறப்பு. பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்தக் கோயில் காரை மரங்கள் நிறைந்திருந்ததால் காரை மரைக்காடு என்றழைக்கப்பட்டது. நாளடைவில் இந்தப் பெயரே காரை என்றாகிவிட்டது. சிவராத்திரி நாளின் போது பக்தர்கள் இந்தக் கோயிலையும் மேல் விஷாரம், வேப்பூர், புதுப்பாடி, குடிமல்லூர், வன்னிவேடு, அவரக்கரை ஆகிய தலங்களையும் தரிசனம் செய்வது வழக்கம். இதன் காரணமாக இந்தக் கோயிலானது இரவு முழுவதும் திறந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தன் மனைவி மீது ஆசை கொண்ட இந்திரனை கவுதம மகரிஷி சபித்துவிட்டார். இச்சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. இதற்காக அவர் மன அமைதி வேண்டி லிங்க வழிபாடு செய்தார். அபிஷேகம் செய்வதற்காகவே கங்கையை இந்த இடத்தில் பொங்கச் செய்தார். கவுதமரின் வேண்டுதலுக்காக வந்த இந்த நதியானது கவுதமி என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் பாலாற்றில் இந்த நதியானது ஐக்கியமாகிவிட்டது. கவுதம மகரிஷி பூஜித்த சிவன் என்பதால், இத்தல இறைவன் கவுதமேஸ்வர்ர் என்று அழைக்கப்படுகிறார்.