சந்திரமௌலீஸ்வரர் கோயில் வரலாறு – புராணக் கதைகள்!
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற பகுதியில் உள்ளது அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சந்திரமவுலீஸ்வரர் (சந்திரசேகரர்) மூலவராக காட்சி தருகிறார். தாயார் அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். வில்வம் மரமே தல விருட்சமாக திகழ்கிறது. வக்ராபுரி என்பதே இந்த ஊரில் புராண பெயராக விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாளின் போது வக்ரகாளியம்மன் திருவீதி உலா வருதல், சித்திரை வருடப்பிறப்பு, சந்திரமவுலீஸ்வரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல், ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, விஜயதசமி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இது தவிர வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு, அஷ்டமி ஆகிய நாட்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
வேறெங்கும் இல்லாத வகையில் இந்தக் கோயிலில் மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். காளி கோயிலின் எதிரில் மேற்கில் ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்று அழைக்கப்படும். இந்த லிங்கமானது கோடை காலங்களில் குளிர்ச்சியாகவும், மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியின் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.
மன நிம்மதி கிடைக்கவும், கிரக தோஷங்கள் நீங்கவும், காரியத் தடைகள் நீங்கவும், பூர்வ ஜென்ம பாவங்கள் விலகவும், புத்திர தோஷங்கள் நீங்க, பாவ தோஷங்கள் விலக சிவனை பிரார்த்தனை செய்கின்றனர். வக்ர தோஷங்கள், ஜாதக கிரக தோஷங்கள் நீங்கவும், வியாபாரத் தடை நீங்கவும், உத்தியோக தடை நீங்கவும், திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு கிடைக்கவும் இத்தலத்தில் உள்ள வக்ர காளியம்மனை வணங்குகின்றனர்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். எவ்வித பிரச்சனையாக இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி அதனை சூலத்தில் கட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
திருமணத் தடை உள்ளவர்கள் புடவை சாற்றுதல், தாலி காணிக்கை, மாலை சாற்றுதல் ஆகியவற்றை நிவர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இதுவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை காசு போடுதல், தொட்டில் கட்டுதல் ஆகியவற்றை நிவர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இதுவே வியாபார விருத்திக்கு கோயில் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித் தருதல் ஆகியவற்றை செய்கிறார்கள்.
இது தவிர, சந்தன காப்பு, பால், தயிர், தேன், இளநீர், பன்னீர்,s மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் ஆன அபிஷேகங்கள் நடக்கின்றன. இந்த தெய்வத்தை குல தெய்வமாக கருதி மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம் செய்தல், குத்து விளக்கு, சர விளக்கு வாங்கி வைத்தல், நெய் தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.
மேலும், சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிஷேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் சித்ரா பௌர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிஷேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது. அம்பாளுக்கு புடவை சாற்றியும் வழிபாடு செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவன் கோயில் வடக்கில் நேபாள் நாட்டிலும் தெற்கில் ஆந்திரா மாநிலம் காளஹஸ்தி கோயிலிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி தரும் சிவலிங்கம் உள்ள கோயில் திருவக்கரை மட்டுமே ஆகும். இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும், வடக்கில் வாதேவ முகமாகவும் தெற்கில் அகோர முகமாகவும் காட்சி தருகிறார். தெற்கில் உள்ள அகோர முகத்தில் வாயில் பகுதியில் இரு கோரை பற்கள் உள்ளன. இதனை பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக காண முடியும்.
பொதுவாக எல்லாக் கோயிலிலும் கோபுர நுழைவு வாயிலிலிருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால், திருவக்கரை கோயிலில் கொடிக்கம்பம், நந்தி, சுவாமி முதலியன ஒரே நேராக இல்லாமல், ஒன்றைவிட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் இருக்கிறது. எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை காணலாம்.
ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு வக்கிரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டுவது வழக்கம். வக்கிரகாளியம்மன் சன்னதி கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீப தரிசனமே இந்தக் கோயிலின் சிறப்பு விசேஷம். வக்ர காளியம்மனின் இடது பாகத்தில் ஆதிசங்கரரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது.
வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இந்தக் கோயிலில் ஜீவ சமாதி அடைந்துள்ளார். அவரது சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு (குழந்தை) குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள் பாலிக்கிறாள்.
பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் சனி பகவானின் வாகனமாக காகம் அவருக்கு வலது புறம் தான் இருக்கும். ஆனால், திருவக்கரை என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் சனி பகவானின் சன்னதியில் காகமானது இடது புறமாக அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது. அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும் என்பது ஐதீகம்.
வக்ரா சூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்ஹாரம் செய்கிறார். அந்த வக்ரா சூரனின் தங்கையான துன்முகியை வக்ர காளி சம்ஹாரம் செய்யும் போது துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் செய்தல் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு துன்முகியை வதம் செய்தாளாம்.
வக்ரா சூரனின் தங்கை துன்முகியை வதம் செய்ததால் வக்ர காளியாக அங்கேயே அமர்ந்துவிட்டாள். சம்ஹாரம் செய்ததால் ஓம்ஹாரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தமடையச் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால், வலது புறம் 5, இடது புறம் 4 என்ற கணக்கில் காளியை சுற்றி வர வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த ஊர் புகழ் பெறுவதற்கு வக்ர காளியம்மனே மூலக் காரணம் ஆகும். வக்ர சாந்தி கோயில் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீஸ்வரி, தில்லை காளி போன்ற சிற்பங்களைப் போன்று வக்கிர காளி அம்மனின் திருவுருவம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. பொதுவாக காளி கோயில் ஊர் எல்லையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு ஊர் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது.
தீ கங்குகளை பின்னணியாக கொண்ட தலை, மண்டை ஓட்டு கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டு திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடது தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடே வந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.